அமேசான், ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கும் நோ காஸ்ட் EMI – உண்மையில் இலவசமா? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
No Cost EMI Explained: அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் தள்ளுபடி விற்பனையை அறிவித்து வருகிறது. குறிப்பாக பொருட்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ என்ற சிறப்பு சலுகையை வழங்குகின்றன. அதனால் நமக்கு உண்மையில் லாபம் கிடைக்குமா என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பண்டிகை காலங்களில் விற்பனையை அதிகரிக்க சில பிராண்டுகள் மற்றும் ஆன்லைன் வணிக தளங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைகளை வழங்கி வருகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக நிதி சுமையை குறைப்பது போல தோன்றினாலும், உண்மையில் இது மறைமுக செலவுகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது ஃபிளிப்கார்ட், அமேசான் (Amazon)ஆகிய நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனையைத் தொடங்கியுள்ளன. இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. கூடுதலாக நோ காஸ்ட் இஎம்ஐ என்ற பெயரில் மாதத் தவணை முறையில் வாங்குபவர்களுக்கு வட்டி வசூலிக்கப்படாது என்ற அறிவிப்பையும் வெளியிடுகின்றன. இது உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு லாபம் அளிக்குமா என பார்க்கலாம்.
நோ காஸ்ட் இஎம்ஐ மூலம் நமக்கு லாபமா?
பொதுவாக ஒரு பொருளை வாங்கும்போது வட்டி இல்லாமல் மாதத்த தவணை வசூலிக்கும் திட்டமே நோ காஸ் இஎம்ஐ. அதாவது நாம் வாங்கும் பொருட்களுக்கு தவணைகளாக பிரித்து வட்டி செலுத்தப்பட வேண்டும். இதற்காக தனியாக வட்டி எதுவும் வசூலிக்கப்படாது. ஆனால் அப்படி வாங்கும்போது எல்லா நேரமும் நமக்கு லாபம் அளிக்க கூடியதாக இருக்காது. வட்டி வசூலிக்கப்படாது என கூறும் நிறுவனங்கள் நடைமுறையில் சில இடங்கலில் பொருளின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கலாம். அதே போல செயலாக்க கட்டணம் வசூலிக்கலாம். ஜிஎஸ்டி போன்ற கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கலாம்.
இதையும் படிக்க : யுபிஐ-ல் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. இந்த வரம்புகள் எல்லாம் மாறுது!
நோ காஸ்ட் இஎம்ஐ நமக்கு லாபமாக தோன்றினாலும், அதற்கு மறைமுக செலவுகள் இருக்கும். உதாரணமாக ஜிஎஸ்டி வரி, செயலாக்க கட்டணம், விலை அதிகம் வைத்து விற்கப்படுவது போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
மறைமுக கட்டணங்களால் ஏற்படும் சிக்கல்
இதுகுறித்து ஆபிஎஸ் குழும இயக்குநர் அமன் குப்தா தெரிவித்ததாவது, நோ காஸ்ட் இஎம்ஐ திட்டங்களில் பல நேரங்களில் நம்மை தேவையில்லாத பொருட்களை வாங்க தூண்டுகின்றன. தவணை செலுத்தும் சுமை குறையும் என நினைத்து கூடுதலாக பொருட்களை வாங்குவோம். இது நீண்டகாலத்தில் சேமிப்பை பாதிப்பதோடு பொருளாதார சிக்கலையும் ஏற்படுத்தும். உண்மையில் இலவச கடன் என்பதே இல்லை. விற்பனையாளர்கள் வட்டியை ஏற்று, வாடிக்கையாளர்களுக்கு வட்டி இல்லாத மாதத் தவணை செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக மாற்று வழிகளில் அதனை வசூலிக்கிறார்கள். இது வெறும் புரமோஷனுக்கான திட்டம் மட்டுமே என்றார்.
இதையும் படிக்க : கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா?.. இந்த தவறை செய்யாதீர்கள்.. வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்!
பொருட்கள் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை
- நீங்கள் பொருட்கள் வாங்கும் முன் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மாதத் தவணை திட்டம் உங்கள் வருமானத்துக்கு ஏற்ப தகுதியாக இருக்க வேண்டும். மாதாந்திர செலவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.
- சில திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வட்டி இல்லாமல் இருக்கும். அதன் பின் வட்டி வசூலிக்கப்படும். இதை முன் கூட்டியே சரிபார்க்க வேண்டும்.
- ஒவ்வொரு நோ காஸ்ட் மாதத் தவணை திட்டத்திலும் விதிமுறைகளை நன்கு படித்து மொத்த செலவையும் கணக்கிட வேண்டும்.