ரயில் ஒன் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% தள்ளுபடி – எப்படி பெறுவது?
Rail One App : ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை ரயில் ஒன் செயலி வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

Rail One Discount
ரயில் (Train) பயணிகளுக்கான ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ளது. ரயில் ஒன் (Rail One) என்ற புதிய மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால், பயண கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சலுகை ஜனவரி 14, 2026 முதல் ஜூலை 14, 2026 வரை அமலில் இருக்கும்.இந்த புதிய செயலி இதுவரை செயல்பாட்டில் இருந்த ரயில் தொடர்பான அனைத்து செயலிகளுக்கும் மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிளாட்ஃபார்ம் டிக்கெட் முதல் தட்கல் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் பெறலாம். இந்த செயலி குறித்தும் அதன் சலுகைகள் குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ரயில்ஒன் செயலி பயணிகளுக்கு வழங்கும் சலுகை
பயணிகளின் வசதிக்காகவும், டிஜிட்டல் முறையில் டிக்கெட் முன்பதிவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலையில் சுமார் 89 சதவீத பயணிகள் ஆன்லைன் முறையிலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். இதனால் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசியம் குறைந்து, நேரமும் பணமும் மிச்சமாகிறது.
இதையும் படிக்க : ஜனவரி 12 முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. வங்கி தேவைகள் இருந்தால் முறையாக பிளான் பண்ணுங்க!
இந்த 3 சதவிகித தள்ளுபடி சலுகையின் முக்கிய அம்சம் என்னவென்றால், யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு என எந்த டிஜிட்டல் கட்டண முறையில் பணம் செலுத்தினாலும் தள்ளுபடி கிடைக்கும். இதற்கு முன்பு இந்த தள்ளுபடி ஆர்-வேலட் மூலம் பணம் செலுத்தினால் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு, அனைத்து டிஜிட்டல் முறையில் பொருந்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரயில்ஒன் செயலியில் முன்பதிவு மட்டுமல்லாமல், முன்பதிவில்லாத ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் ரயில்கள் என அனைத்து வகை ரயில் டிக்கெட்டுகளையும் ஒரே செயலியன் மூலம் பெற முடியும். இது பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனில் ரயில் டிக்கெட்டுகளுக்காக ஒரே நேரத்தில் பல செயலிகளை பயன்படுத்த வேண்டிய தேவைகளை குறைக்கிறது.
இதையும் படிக்க : ரூ.30,000 ஆக உயர்த்தப்படும் பிஎஃப் வரம்பு? தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
முக்கிய விதிகள்
- இந்த 3 சதவிகித தள்ளுபடியை பெற ரயில் ஒன் செயலியில் மட்டும் முன்பதிவு செய்தால் தான் கிடைக்கும்.
- மற்ற எந்த தளங்கள் அல்லது செயலிகள் மூலம் முன்பதிவு செய்தால் இந்த சலுகை பொருந்தாது.
- ஆர்-வேலட் மூலம் வழங்கப்பட்டு வந்த 3 சதவிகித தள்ளுபடியும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது, ரயில்வே டிக்கெட் முன்பதிவு மென்பொருள் அமைப்புகளில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.