2025ல் உலகையே உலுக்கிய போர் – மோதல்களும்.. நீடிக்கும் பதற்றமும்.. ஒரு பார்வை!!

Yearender 2025: சர்வதேச மேடைகளில் அமைதிக்கான அழைப்புகள் எழுந்தாலும், பொதுமக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் வன்முறை நிற்கவில்லை. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இடையிடையே மோதல்கள் ஏற்பட்டன. சாஹெல் பகுதியின் சில பகுதிகளில் தீவிரவாத வன்முறைகள் தொடர்ந்ததால் பிராந்திய நிலைகுலைவு நீடித்தது.

2025ல் உலகையே உலுக்கிய போர் - மோதல்களும்.. நீடிக்கும் பதற்றமும்.. ஒரு பார்வை!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

25 Dec 2025 14:07 PM

 IST

2025ஆம் ஆண்டு முழுவதும் நீண்டகாலமாக நீடித்த பல போர்களும், புதிய மோதல்களும் தீர்வு இல்லாமல் தொடர்ந்ததால், உலகளாவிய உறுதியற்ற தன்மை தொடர்ந்தது. ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் நீடித்த போர்களும் புதிய மோதல்களும் தீர்வின்றி தொடர்ந்ததால், உலக அரசியல் சூழல் ஆழமாக மாற்றம் கண்டது. லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்; மனிதாபிமான நெருக்கடிகள் மேலும் மோசமடைந்தன. சர்வதேச மேடைகளில் அமைதிக்கான அழைப்புகள் எழுந்தாலும், பொதுமக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் வன்முறை நிற்கவில்லை. 2026ஐ நோக்கி உலகம் நகரும் நிலையில், 2025-ல் தலைப்புச் செய்திகளாக இருந்தும் தீர்வின்றி நீடிக்கும் முக்கிய உலக மோதல்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.

ரஷ்யா – உக்ரைன் போர்:

2022ல் தொடங்கிய ரஷ்யா–உக்ரைன் மோதல், 2025லும் உலகின் மிக முக்கியமான போர்களில் ஒன்றாகத் தொடர்ந்தது. தூதரக முயற்சிகளும் அமைதி முன்மொழிவுகளும் பேசப்பட்டாலும், பல முனைகளில் சண்டை தொடர்ந்தது. அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி வெளியிட்ட புதிய 20 அம்ச அமைதி திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தது. ஆனால், நிலப்பரப்பு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த முக்கிய முரண்பாடுகள் காரணமாக, 2025 இறுதிவரை இந்தப் போர் தீர்வின்றியே உள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீன் வன்முறை மற்றும் காசா நெருக்கடி:

பல தசாப்தங்களாக நீடிக்கும் இஸ்ரேல்–பாலஸ்தீன் மோதல் 2025-லும் தீவிரமாக இருந்தது; குறிப்பாக காசா பகுதியில் மனிதாபிமான நிலை மிகவும் மோசமடைந்தது. தொடரும் மோதல்கள் மற்றும் முற்றுகை நிலை காரணமாக, உணவுத் தட்டுபாடு ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகினர். காசாவிலும் மேற்குக் கரையிலும் ஏற்பட்ட வன்முறைகள், ஆண்டுதோறும் பிராந்திய நிலைகுலைவைக் கடுமையாக்கின.

சூடானின் உள்நாட்டுப் போர்:

சூடான் 2025 முழுவதும் கொடூரமான உள்நாட்டுப் போரில் சிக்கியே இருந்தது. சூடானிய ஆயுதப் படைகளுக்கும் ராபிட் சப்போர்ட் குழுவினருக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வராத நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். கடுமையான உணவுத் தட்டுப்பாடு மற்றும் பரவலான இடம்பெயர்வு இந்த மோதலை ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மனிதாபிமான பேரழிவுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் மோதல்:

கிழக்கு காங்கோவில், அரசுப் படைகள் மற்றும் ருவாண்டா ஆதரவுடன் செயல்படும் M23 கிளர்ச்சிக் குழுவுக்கிடையிலான சண்டை 2025 தொடக்கத்திலேயே தொடர்ந்தது. அமெரிக்கா நடத்திய அமைதி முயற்சிகளும் பிராந்திய தலைவர்களின் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், கிளர்ச்சியாளர்களின் நிலப்பரப்பு முன்னேற்றங்களும் பொதுமக்கள் பாதிப்புகளும் ஆண்டு முழுவதும் நீடித்தன.

மியான்மர் உள்நாட்டு மோதல்:

மியான்மரில் ராணுவ ஆட்சியும் பல்வேறு இன ஆயுதக் குழுக்களும் இடையிலான உள்நாட்டுப் போர் 2025-லும் குறையவில்லை. மோதல்கள் தீவிரமடைந்ததால் கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். பல பகுதிகளில் உதவித் திட்டங்கள் குறைக்கப்பட்டதால் மனிதாபிமான தேவைகள் அதிகரித்தன.

மேலும் சில முக்கிய மோதல்கள்:

மேற்கண்ட போர்களுக்கு அப்பாலும், 2025ல் பல மோதல்கள் குறைந்த தீவிரத்துடன் தொடர்ந்தன. பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இடையிடையே மோதல்கள் ஏற்பட்டன. சாஹெல் பகுதியின் சில பகுதிகளில் தீவிரவாத வன்முறைகள் தொடர்ந்ததால் பிராந்திய நிலைகுலைவு நீடித்தது. இம்மோதல்கள் உலகப் பாதுகாப்புச் சவால்களை மேலும் சிக்கலாக்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்டகால துன்பங்களை ஏற்படுத்தின.

குப்பைத் தொட்டியில் கடந்த சீன துப்பாக்கி ஸ்கோப்.. விளையாட்டுப் பொருள் என விளையாடிய சிறுவன்!
‘ரஷ்ய இராணுவத்தில் சேர வற்புறுத்தப்பட்ட குஜராத் மாணவர்’ உக்ரைனில் இருந்து உதவிக்கோரி வீடியோ!
‘உங்கள் வாட்ஸ்அப் ‘ஹைஜாக்’ ஆகும் ஆபத்து’.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!
அடேங்கப்பா.. புர்ஜ் கலீஃபாவை மிஞ்ச தயாராகும் சவூதி அரேபியாவின் ஜெட்டா டவர்..