World Malayalee Council: பிரமாண்டமாக தொடங்கிய உலக மலையாளி கவுன்சிலின் கூட்டம்!
உலக மலையாளி கவுன்சிலின் (WMC) 14வது ஈராண்டு மாநாடு, 565 பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில் வெகு விமர்சையாக தொடங்கியது. உலகளாவிய நிர்வாகக் குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்கள், புதிய தலைவர்களின் தேர்தல் ஆகியவை நடைபெறும். இது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மலையாளிகள் கவுன்சில் கூட்டம்
உலக மலையாளி கவுன்சிலின் (WMC) 14வது ஈராண்டு கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 24) பாங்காக்கில் உள்ள ராயல் ஆர்க்கிட் ஷெரட்டன் ஹோட்டலில் ஒரு பிரமாண்டமான விருந்துடன் தொடங்கியது. உலகெங்கிலும் உள்ள ஆறு நாடுகளைச் சேர்ந்த 70 மாகாணங்களிலிருந்து 565 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். மலையாளிகளின் கலாச்சாரம், அவர்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் உலகளாவிய உணர்வைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் உலகளாவிய நிர்வாகக் குழு மற்றும் உலகளாவிய பொதுக் குழுவின் முக்கியமான கூட்டங்கள், புதிய உலகளாவிய அலுவலகத் தலைவர்களின் தேர்தல் மற்றும் பதவியேற்பு ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
மலையாளிகளின் இருப்பைப் பிரதிபலிக்கும்
இந்த பிரமாண்டமான நிகழ்ச்சி தொடர்பாக உலக பொதுச் செயலாளர் தினேஷ் நாயர் கூறுகையில், இந்தக் கூட்டம் உலக மலையாளி கவுன்சிலின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என்றும், இது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் மலையாளிகளின் இருப்பைப் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். அதேசமயம் “உலகளவில் மலையாளி சமூகத்தை ஒன்றிணைப்பதிலும், உலகளவில் மலையாளிகளின் ஒற்றுமை, கலாச்சாரம் மற்றும் நலனை மேம்படுத்துவதிலும் WMC ஒரு உந்து சக்தியாக இருந்து வருகிறது” என்று உலகளாவிய தலைவர் தாமஸ் மோட்டகல் கூறியுள்ளார்.
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்
மேலும் இந்த மாநாடு குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட குளோபல் பொருளாளர் ஷாஜி மேத்யூ, “மலையாளி சமூகத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் என்றும், பிரதிநிதிகள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்கும்” என்றும் தான் நம்புவதாக கூறினார்.
இப்படியான நிலையில் வளமான கலாச்சார நிகழ்ச்சிகள், அறிவுசார் விவாதங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளுடன், WMC குளோபல் மாநாடு 2025 அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடானது ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.