டெல்லி கார் குண்டு வெடிப்பை நடத்தியதே நாங்கள் தான்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் பகீர் பேச்சு!
Pakistan Leader Claims Responsibility for Delhi Incident | டெல்லி கார் குண்டு வெடிப்பு விபத்தில் 15 பேர் பலியாகியுள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் தலைவர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைவர் பகீர் பேச்சு
இஸ்லாமாபாத், நவம்பர் 21 : தலைநகர் டெல்லியில் (Delhi) நவம்பர் 10, 2025 அன்று கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில், 27 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு (CBI – Central Bureau of Investigation) அதன் விசாரணையை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பலரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் தலைவர் ஒருவர் கடும் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.
தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ
இந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியது டெல்லி அருகே உள்ள பரிதாபாத் பல்கலைக்கழகத்தில் மருத்துவராக பணியாற்றி வந்த முகமது நபி என்பது தெரிய வந்தது. இந்த நிலையில், அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரை அடிப்படையாக கொண்டு மேலும் பலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பை நடத்தியதே நாங்கள் தான் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் சவுத்ரி அன்வாருல்ஹக் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க கோரிய கோரிக்கையை இந்தியா நிராகரிக்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் சொன்னது என்ன?
நவம்பர் 17, 2025 அன்று நடைபெற்ற நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் தோல்வியை தழுவிய நிலையில், சவுத்ரி தனது பிரதமர் பதவியை இழந்தார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பலோசிஸ்தானை நீங்கள் தொடர்ந்து ரத்தம் சிந்த வைத்தால் செங்கோட்டை முதல் காஷ்மீரின் வனப்பகுதி வரை தாக்குதல் நடத்துவோம் என இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். எங்கள் ஷாக்கின்கள் அதனை செய்தனர். அவர்களால் இன்னும் உடலக்ளை எண்ணி முடிக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். டெல்லி கார் குண்டு வெடிப்பு விபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவர் இவ்வாறு கூறியுள்ளது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.