அலுவலக டெஸ்க்கின் கீழே பாம்பு – ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி – அடுத்து என்ன ஆச்சு தெரியுமா?
Snake Under Office Desk : அமெரிக்காவின் கொலராடோவில் வசிக்கும் ஒரு நபர் தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது டெஸ்க்கின் கீழ் ஒரு பெரிய பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அலுவலகத்தில் பாம்பு
அமெரிக்காவின் (America) கொலராடோ மாநிலத்தில் வசிக்கும் ஒருவர் தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென தனது டெஸ்க்கின் கீழ் ஒரு பெரிய பாம்பு (Snake) இருந்ததைக் கண்டார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்ததோடு, அந்த தருணத்தை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிராக்கிள் மேன் கேஷ் எனும் பெயரில் இன்ஸ்டாகிராமில் இயங்கும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இவர் அமெரிக்காவின் கொலராடோவில் பல்வேறு இடங்களில் தொல்பொருள் தேடல் (Treasure Hunt) குறித்த பதிவுகளை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது மேலே குறிப்பிட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
அலுவலக டெஸ்க்கின் கீழே பாம்பு!
அவர் தனது வீடியோவில் மிகவும் பதட்டமாக, “ஓ மை காட்… இதைப் பாருங்க! நா என்னோட ஆபீஸ்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போது எனது டெஸ்க்கின் கீழே பாம்பு இருந்தது. அது எப்படி வந்ததுனு தெரியல. நெஜமாவே ஹார்ட் அட்டாக் வர மாதிரி இருந்தது. என்னை யாராச்சும் காப்பாத்துங்க” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாம்பு சுவரோரமாக சென்று கதவின் வழியாக வெளியேறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அப்போது அவர் பார்த்துப் போ என பாம்புக்கு அறிவுரை வழங்குகிறார். இந்த வீடியோ அவரது ஃபாலோயர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
விஷமில்லாத பாம்பு
இந்த சம்பவம் குறித்து மேலும் விளக்கமளித்த அவர், காலையில் நான் அலுவலகம் வரும்போது சத்தம் வருவதைக் கேட்டேன். ஆனால் என்ன சத்தம் என என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகே பாம்பு டெஸ்க்கின் கீழே இருப்பது தெரிய வந்தது.
முதலில் அது ஒரு விஷபாம்பு என எண்ணிய மிராக்கிள் மேன் கேஷ், பின்னர் சமூக வலைதள பயனர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் அது புல் ஸ்நேக் (Bull Snake) என அறிந்துகொண்டார். புல் ஸ்நேக் என்பது கொலராடோவில் பொதுவாக காணப்படும், விஷமில்லாத பாம்பு வகை. இது மனிதர்களுக்கு ஆபத்தில்லாதது என்றும், பயப்பட வேண்டியதில்லை என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் தனது பதிவில் #bullsnake எனும் ஹேஷ்டேக்கை பின்னர் சேர்த்துள்ளார்.
இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு முக்கிய பாடமாக இருக்கிறது. நம்மைப் போன்று இயற்கையின் ஓர் அங்கமாக இருக்கும் பாம்புகளும் தங்களை பாதுகாக்க தான் முயல்கின்றன. அதனால் அவற்றை அடிக்கவோ, கொல்லவோ தேவையில்லை. மாறாக, பாதுகாப்புடன் விலகி நின்று அது தன் வழியே செல்ல அனுமதிப்பது தான் சிறந்த தீர்வாகும் என்பதை மிராக்கிள் மேன் கேஷ்ஷின் இந்த வீடியோ நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.