ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஈரான் உருவாக்கி வரும் அச்சுறுத்தலை நீக்கும் நோக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ஈரான் அரசு நீண்ட காலமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அந்த நாடு அணு ஆயுதங்களை பெற்றுக்கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
US Israel Iran War Live : அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்… பதில் தாக்குதலை தொடர்ந்த ஈரான் – பரபரப்பு தகவல்கள்
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிகழ்வுகள், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்
LIVE NEWS & UPDATES
-
மத்திய கிழக்கில் அமெரிக்கா -இஸ்ரேல் ராணுவ மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் – ஈரான் தகவல்
மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ மையங்கள் மீது சக்திவாய்ந்த ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்ட ஈரான் மத தலைவர் கமேனெய்
இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் மதத் தலைவரான அயத்துல்லா அலி கமேனெய் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமான பாதுகாப்பு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தங்களுக்கு உரிமை உள்ளது – கத்தார் வெளியுறவு அமைச்சகம்
ஈரான் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, தேவையான நேரத்தில் பதிலடி கொடுக்க கத்தாருக்கு முழு உரிமை இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களின் படி, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இதற்கிடையில், கத்தார் தலைநகர் தோஹா பகுதியில் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மத தலைவர்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல்
ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலில், அந்த நாட்டின் உயரிய மதத் தலைவரான அயத்துல்லா அலி கமேனெய் மற்றும் அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆகியோர் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் ஈரானின் முக்கிய பகுதிகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய தூதரகம்
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் தற்போதைய பரபரப்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் அனைத்து இந்தியர்களுக்கு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், இந்தியர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பாதுகாப்புடன் செயல்படவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும், துபாயில் செயல்படும் இந்திய துணை தூதரகமும் வழக்கம்போல செயல்பட்டு வருவதாகவும், தேவையான தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவிகள் ஏற்பட்டால், இந்தியர்கள் கீழ்க்கண்ட தொடர்பு எண்கள் மூலம் உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- டோல்ஃப்ரீ எண்: 800 46342
- வாட்ஸ்அப் எண்: +971 54 309 0571
- மற்றும் மின்னஞ்சல் முகவரி: pbsk.dubai@mea.gov.in ஆகியவற்றை தொடர்புகொண்டு உதவி கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தடுத்து நிறுத்தம் – ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்
ஈரான் செலுத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகளை தங்களது வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஏவுகணை தாக்குதல் முயற்சி கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் திறம்பட செயல்பட்டு பல ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதலில் பள்ளி மாணவிகள் உயிரிழப்பு… ஈரான் தகவல்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட தாக்குதலில், ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 மாணவிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி, இந்த செய்தியை சர்வதேச செய்தி நிறுவனம் அசோசியேட்டெட் பிரஸ் வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற போது பள்ளி வளாகம் சேதமடைந்ததாகவும், இதில் படித்து வந்த மாணவிகள் பலியாகியதாகவும் கூறப்படுகிறது.
-
ஈரான் மீது தாக்குதல் – டிரம்புக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை ஆபத்தானது – ஐரோப்பிய கமிஷன் துணைத் தலைவர் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் சமீபத்திய நிகழ்வுகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக ஐரோப்பிய கமிஷன் துணைத் தலைவர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் அரசு, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்கள் உலக பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கூறினார்.
-
குவைத்தில் எச்சரிக்கை சைரன் ஒலி
மேற்கு ஆசிய பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அபுதாபி மற்றும் பஹ்ரைன் பகுதிகளில் வெடி சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வெடி சத்தங்கள் கேட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக குவைத்தில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஈரானில் பொதுக்கட்டிடங்கள் சேதம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல்களில், நாட்டின் பல நகரங்களில் உள்ள பொது கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மற்றும் ஈரான் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் பகுதிகளையும் பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் – ஈரான் பதற்றம் தீவிரம் – மேற்கு ஆசிய வான்வெளி மூடல்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஈரானும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகள் தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிகழ்வுகள், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 8, 2026 அன்று அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் இருந்து கரும்புகை எழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தற்போது கிடைத்த சில தகவல்களின் படி, ஈரானின் மதத் தலைவரான அயத்துல்லா அலி கமேனேய் அலுவலகத்தின் அருகிலும் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஈரான் வான்வெளி வழியாக சென்ற பல சர்வதேச பயணிகள் விமானங்கள் அவசரமாக தங்கள் பாதையை மாற்றி பயணிக்க தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் பல விமானங்கள் மாற்று வழிகளில் இயக்கப்பட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்க கடற்படை தளம் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow Us