அமெரிக்காவில் பரபரப்பு.. இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் 2 பேர் சுட்டுக் கொலை.. கொதித்தெழுந்த டிரம்ப்!

Israel Embassy Staff : அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 மே 22ஆம் தேதியான நேற்று இரவு வாஷிங்டனில் யூத அருங்காட்சியகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பரபரப்பு.. இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் 2 பேர் சுட்டுக் கொலை.. கொதித்தெழுந்த டிரம்ப்!

மாதிரிப்படம்

Updated On: 

22 May 2025 11:42 AM

அமெரிக்கா,  மே 22 : அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் நடந்த சம்பவம் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2025 மே 22ஆம் தேதியான நேற்று இரவு யூத அருங்காட்சியகம் அருகே வாஷிங்டனில்  இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு அருங்காட்சியகத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள FBI அலுவலகத்திற்கு அருகில் நடந்தது. அமெரிக்காவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு சம்பவங்கள் யூதர்கள் மற்றும் இஸ்ரேல் ஆதரவு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொலை

இஸ்ரேலுக்கு,   ஹமாஸ் படையினருக்கு போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் ஒரு ஆண்டு மற்றும் பெண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.  இரண்டு தூதரக அதிகாரிகள் கொலை செய்ததாக சிகாகோவைச் சேர்ந்த 30 வயது நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர் எலியாஸ் ரோட்ரிக்ஸ் என்று அடையாளம் காணப்பட்டார். இவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது, சுதந்திரம் பாலஸ்தீனம் என கூச்சலிட்டதாக தெரிகிறது. சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி மற்றும் கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் ஜீனைன் பிர்ரோ ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன் தனது எக்ஸ் தளத்தில், இந்த தாக்குதலை கண்டிக்கிறேன். யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் இழிவான செயல் என குறிப்பிட்டு இருந்தார்.

கொதித்தெழுந்த டிரம்ப்


இந்த சம்பவத்தை கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், “யூத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த கொடூரமான கொலைகள் இப்போதே முடிவுக்கு வர வேண்டும். வெறுப்புக்கும் தீவிரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். இது போன்ற விஷயங்கள் நடப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க யூதக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி டெட் டாய்ச் கூறுகையில், “நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வன்முறைச் செயல் அரங்கிற்கு வெளியே நடந்ததைக் கண்டு நாங்கள் திகைத்துப் போனோம். இந்த நேரத்தில், சரியாக என்ன நடந்தது என்பது குறித்து போலீசாரிடமிருந்து கூடுதல் தகவலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம். ​​ உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்றார்.