அப்பாவிகள் கொல்லப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது… இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை..

அக்டோபர் 7ஆம் தேதி நடந்த படுகொலையை நினைவுகூர்ந்த அவர், “அந்த நாளின் வேதனையை நான் உணர்கிறேன். ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஒவ்வொரு நிர்பராதி பொதுமக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்பராதிகளை கொல்வதை ஒருபோதும் சகிக்க முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிராக ‘பூஜ்ய சகிப்புத் தன்மை’ அவசியம் என குறிப்பிட்டுள்ளார்

அப்பாவிகள் கொல்லப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது...  இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை..

கோப்பு புகைப்படம்

Published: 

26 Feb 2026 08:58 AM

 IST

பிப்ரவரி 26, 2026: பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அவரது மனைவி விமான நிலையத்திற்கே வந்து பிரதமர் மோடியை வரவேற்புடன் வரவேற்றனர். அவருக்கு சிறப்பு கௌரவ அணிவகுப்பும் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றமான க்னெசெட்டில் உரையாற்றினார்.  உரையாற்றிய பிரதமர் மோடி, “முழு இந்திய மக்களின் சார்பில் உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் முதல் பிரதமராக இங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எனக்கு பெருமையான தருணமாகும். மீண்டும் இங்கு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்தார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி:

அக்டோபர் 7ஆம் தேதி நடந்த படுகொலையை நினைவுகூர்ந்த அவர், “அந்த நாளின் வேதனையை நான் உணர்கிறேன். ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஒவ்வொரு நிர்பராதி பொதுமக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்பராதிகளை கொல்வதை ஒருபோதும் சகிக்க முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிராக ‘பூஜ்ய சகிப்புத் தன்மை’ அவசியம். உலக நாடுகள் இதற்கு ஒரே நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது” என தெரிவித்தார்.

“இந்தியா உறுதியுடன் இஸ்ரேலுடன் நிற்கிறது. உங்கள் துயரை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் துக்கத்தில் நாங்கள் பங்கெடுக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

காசா அமைதி முயற்சியை (Gaza Peace Initiative) ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்திருப்பதை குறிப்பிட்ட அவர், “இந்த முயற்சி நிலையான அமைதிக்கான பாதையை காட்டுகிறது. இதில் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் அடங்கும். அமைதிக்கான பாதை எப்போதும் எளிதாக இருக்காது. ஆனால் இந்தியா உரையாடல், அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக உங்களுடனும் உலக நாடுகளுடனும் இணைந்து செயல்படும்” என தெரிவித்தார்.

“இந்தியா–இஸ்ரேல் இயற்கையான கூட்டாளிகள். இந்தியா தொடர்ந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் பொருளாதார வழித்தடங்களை உருவாக்கி வருகிறது. பாதுகாப்பு துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இஸ்ரேல் புதுமையின் மையமாக திகழ்கிறது. இரு நாடுகளும் ஸ்டார்ட்அப் துறையில் முன்னணியில் உள்ளன. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன” என்றும் அவர் கூறினார்.

இந்தியா – இஸ்ரேல் உறவு:

“இஸ்ரேல் பாலைவனத்தை வளமாக மாற்றிய அதிசயம் செய்துள்ளது. இஸ்ரேல் இளைஞர்களை இந்தியாவில் வரவேற்கிறேன். இஸ்ரேலில் யோகா பரவலாகப் பரவி வருகிறது. இந்தியா–இஸ்ரேல் உறவு இரத்தமும் தியாகமும் இணைந்தது. முதல் உலகப்போரின் போது 4,000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இந்தப் பகுதியில் உயிர்நீத்தனர்” எனவும் தெரிவித்தார்.

வேகமாக வளர்ந்து வரும் நாடு இந்தியா – க்னெசெட் தலைவர் அமீர் ஓஹானா:

இதற்கு முன் க்னெசெட்டில் “மோடி, மோடி” என கோஷங்கள் எழுந்தன. க்னெசெட் தலைவர் அமீர் ஓஹானா, “இது எங்களுக்கு பெருமையான தருணம். இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். இந்தியா–இஸ்ரேல் உண்மையான நண்பர்கள். இந்தியா யூதர்களுக்கு தங்கும் இடமாக இருந்துள்ளது. மும்பை தாக்குதல் ஆகட்டும், பஹல்காம் தாக்குதல் ஆகட்டும் – இஸ்ரேல் இந்தியாவுடன் நிற்கிறது” என தெரிவித்தார். மேலும் ஹிந்தியில் “யெருசலேமில் உங்களை வரவேற்கிறோம்” என கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டலுடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

பிரதமர் நெதன்யாகு பெருமிதம்:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உரையாற்றும்போது, “இது எங்களுக்கு பெருமையான தருணம். இந்தியா–இஸ்ரேல் மகத்தான நண்பர்கள். நாம் நண்பர்களை விட சகோதரர்கள் போன்றவர்கள். இந்தியாவுடன் வர்த்தகம் இரட்டிப்பு ஆகியுள்ளது; ஒத்துழைப்பு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர்” என தெரிவித்தார்.

“நாம் இரண்டு பண்டைய நாகரிகங்கள். ‘மோடி ஹக்’ குறித்து உலகம் முழுவதும் பேசப்படுகிறது. மோடி யாரையும் அணைத்துக் கொள்ளும்போது அது வெளிப்புறக் காட்சிக்காக அல்ல; அது இதயப்பூர்வமான அணைப்பு” எனவும் அவர் தெரிவித்தார்.

“நரேந்திரா, என் அன்புத் தோழரே, உங்கள் வருகையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இன்று காலை என் மனைவியுடன் விமான நிலையத்தில் உங்களை வரவேற்றோம். நீங்கள் விமானப் படிக்கட்டில் இருந்து இறங்கியதும் நாம் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டோம். அது ஒரு சிறப்பான தருணம்” என நேதன்யாகு தெரிவித்தார்.

“இந்தியா ஒன்றரை பில்லியன் மக்களைக் கொண்ட பெரும் சக்தி. இஸ்ரேல் அளவில் சிறிய நாடாக இருந்தாலும் திறமையில் பெரியது. நமது கூட்டணி இரு நாடுகளின் வலிமைகளைப் பெருக்கி காட்டும் பெரும் பலமளிப்பாகும். அது உணர்வுகளின் பலமளிப்பு; செயல் திறனின் பலமளிப்பு” என்றும் கூறினார்.

“உலகின் பல பகுதிகளில் யூத விரோதம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா தனித்துவமாகத் திகழ்கிறது. இந்தியா யூதர்களை ஒருபோதும் துன்புறுத்தவில்லை; அவர்களை வரவேற்ற நாகரிகம். இதை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். நன்றி… இந்தியா!” என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.

Follow Us
நாய் நக்கிய காயம்: செப்சிஸால் நான்கு உறுப்புகள் துண்டிப்பு – அதிர்ச்சி சம்பவம்
பழைய ஸ்மார்ட்போனில் ஒளிந்திருக்கும் அரிய பொக்கிஷம்.. இந்தியாவின் 'அணு இறையாண்மைக்கு' உதவும் இ-கழிவு மறுசுழற்சி!
கொள்ளையர்களை விரட்டிய என்.ஆர்.ஐ பெண் – லூதியானாவில் பரபரப்பு சம்பவம்
"ரியல் கேரளா ஸ்டோரி".. 2 வாரங்களாக மெட்ரோ தூணில் தவித்த பூனை பத்திரமாக மீட்பு!