கென்யாவில் நடந்த பேருந்து விபத்து – 6 இந்தியர்கள் பலி… அதிர்ச்சி சம்பவம்

Kenya Road Accident : கத்தாரில் இருந்து 28 இந்தியர்கள் பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு கென்யாவிற்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட பேருந்து விபத்தில் 6 பேர் பலியானார்கள். பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கென்யாவில் நடந்த பேருந்து விபத்து - 6 இந்தியர்கள் பலி... அதிர்ச்சி சம்பவம்

கென்யாவில் நடந்த பேருந்து விபத்து

Published: 

10 Jun 2025 20:49 PM

 IST

கென்யா (Kenya) நாட்டில் இந்தியாவைச் (India) சேர்ந்த பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 இந்தியர்கள் உயிரிழந்தனர்.  இறந்த ஆறு பேரில், குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கத்தார் (Qatar) நாட்டில் இருந்து 28 இந்தியர்கள் சுற்றுலாவுக்காக கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் கென்யாவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் உயிரிழந்தவர்களில் கேரளாவைச் சேர்ந்த கீதா சோஜி ஐசக் திருவல்லாவைச் சேர்ந்தவர், பாலக்காடு ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த ரியா மற்றும் அவரது மகள் டைரா மற்றும் குருவாயூரைச் சேர்ந்த ஜஸ்னா குட்டிக்காட்டுச்சலில் மற்றும் அவரது மகள் ரூஹி மெஹ்ரின் ஆகியோர் அடங்குவர். மேலும் மலையாளிகளைத் தவிர, இறந்த மற்றொரு நபர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் ஐந்து பேர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்களில் 14 பேர் மலையாளிகள். இறந்த ரியாவின் கணவர் ஜோயல் மற்றும் மகன் டிராவிஸ், ஜஸ்னாவின் கணவர் முகமது ஹனிஃபா ஆகியோரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கென்யாவின் வடகிழக்கு மாகாணமான நியாண்டருவாவில் உள்ள நகுரு சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி சென்று விபத்துக்குள்ளானது.

கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு

 

இந்த விபத்து ஜூன் 9, 2025  அன்று மாலை நடந்ததாக இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தோஹாவில் சமூகக் குழுக்கள் உட்பட, தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு இந்தக் குழு கென்யாவிற்கு விடுமுறைக்காக வந்திருக்கிறார்கள். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் இந்தியர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..