Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

 ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – பரபரப்பு சம்பவம்

Israel Iran Tensions Rise : ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பிரிட்டன் ஊடகம் பிபிசி வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இந்த தாக்குதல்கள் ஈரானின் முக்கிய அணு ஆயுத மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

 ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – பரபரப்பு சம்பவம்
Isreal
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Jun 2025 23:55 PM

ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பிரிட்டன் ஊடகமான பிபிசி வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இந்த தாக்குதல்கள் ஈரானின் முக்கிய அணு ஆயுத மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கின்றன. தனது தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஈரானின் முக்கிய அணு ஆயுத உற்பத்தி மையங்கள் மற்றும் ராணுவத் தளங்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தெஹ்ரான், கராஜ் ஆகிய நகரங்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன. மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. பிபிசி உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகளின்படி, இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

இஸ்ரேல், ஈரானின் அணு மற்றும் ராணுவ அமைப்புகளைத் தாக்கியதற்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள், மீண்டும் தலைநகர் தெஹ்ரான் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள முக்கியமான பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை இந்த தாக்குதல்களை மேற்கொண்டது. இதுவரை 200க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஈரானின் இஸ்பஹான் பகுதியில் உள்ள அணு உற்பத்தி நிலையமும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஈரானின் ஃபோர்டோ அணு உற்பத்தி நிலையம் அருகே இரண்டு பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெஹ்ரான், கராஜ் உள்ளிட்ட நகரங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட நிலையில், ஈரானின் ஏர் டிபென்ஸ் அமைப்புகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் முக்கிய ராணுவ அதிகாரிகள் பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதால், மத்திய கிழக்கில் நிலவும் அமைதி கேள்விக்குறியாகியுள்ளது.

இஸ்ரேல் ஈரானின் தலைநகர் தெஹ்ரானை நோக்கி ஜூன் 13, 2025 அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து நடத்தப்பட்டது. இதில் ஈரானின் இரு முக்கிய ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் பிரதமருடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி

 

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தொலைபேசி அழைப்பு வந்தது. தற்போது அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து அவர் என்னிடம் விளக்கினார். அந்த பகுதியில் நிலவும் பிரச்னை குறித்து இந்தியாவின் கவலையை பகிர்ந்தேன். மேலும், அந்த பகுதியில் மிக விரைவில் அமைதியும் நிலைத்தன்மையும் மீண்டும் உறுதியாக வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.” என தெரிவித்தார்.

முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஈரானின் அணு திட்டம் தங்களுக்கு அச்சுறுத்தலாக  இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் நாடு முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார்.