உச்சகட்ட பதற்றம்.. ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்.. உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்
Strait of Hormuz: ஈரானின் இந்த அதிரடி முடிவால் உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 டாலரைத் தாண்டியுள்ளது. போர் நீடித்தால் இது 100 டாலரை எட்டும் என அஞ்சப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் தனது மிகக் கடுமையான பதிலடியைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான கடல்வழி வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது. ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பலும் ஈரானியப் படைகளால் தாக்கப்படும்” என்று ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும்.. டிரம்ப் பரபரப்பு பதிவு!
ஈரானின் அதிரடி எச்சரிக்கை:
இதுகுறித்து ஈரானியக் கடற்படை விடுத்துள்ள செய்தியில், “எந்தவொரு கப்பலும் ஹார்முஸ் நீரிணையை கடக்க அனுமதி இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி கடக்க முயலும் எந்தவொரு கப்பலும், ஈரானியப் படைகளால் தாக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஏற்கனவே தங்கள் உத்தரவை மீறிச் சென்ற ஒரு எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட அனைத்து மாலுமிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) அப்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. வானொலி வழியாக அந்தப் பாதையில் வரும் கப்பல்களுக்கு, “எந்தவொரு கப்பலும் ஹார்முஸ் நீரிணையை கடக்க அனுமதி இல்லை” என்று தொடர் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
ஏன் இந்த ஜலசந்தி முக்கியமானது?
ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஓமன் மற்றும் ஈரானுக்கு இடையே அமைந்துள்ள ஒரு குறுகிய கடல் பகுதி. உலக அளவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய்களில் 20%க்கும் அதிகமானவை இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் தங்கள் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தப் பாதையையே பெரிதும் சார்ந்துள்ளன. இந்தப் பாதை மூடப்படுவது உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
உலகளாவிய பாதிப்புகள்:
ஈரானின் இந்த அதிரடி முடிவால் உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 டாலரைத் தாண்டியுள்ளது. போர் நீடித்தால் இது 100 டாலரை எட்டும் என அஞ்சப்படுகிறது. போர்ப் பதற்றத்தால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுப்பதால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளன. இந்தியப் பங்குச்சந்தைகள் உட்பட உலகளாவிய சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் ஆயிரக்கணக்கில் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவின் கவலை:
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%க்கும் மேலாக இறக்குமதி செய்கிறது. வளைகுடா நாடுகளுடனான கடல்வழித் தொடர்பு துண்டிக்கப்பட்டால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதோடு அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் மத்திய அரசு கவலை கொண்டுள்ளது.
இதையும் படிக்க: பிரதமர் நெதன்யாகு அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்.. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவிப்பு..
ஈரானின் முடிவால் போர் மேகம் சூழ்ந்தது:
ஈரானின் இந்த அதிரடி முடிவால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இந்தப் பகுதியை மீண்டும் திறக்க ராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்பதால் போர் மேகம் சூழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வல்லரசு நாடுகளின் தலையீடு இந்தப் பதற்றத்தைத் தணிக்குமா அல்லது இது ‘மூன்றாம் உலகப் போருக்கு’ வித்திடுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.