உக்ரைன் ராணுவ படையிடம் பணய கைதியாக உள்ள குஜராத் மாணவர்.. மத்திய அரசுக்கு கோரிக்கை!
Gujarat Student Become Hostage For Ukraine Military | உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் பலரை தனது ராணுவத்தில் இணைத்து வருகிறது. அந்த வகையில் ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்பட்ட குஜராத் மாணவர், தற்போது உக்ரைன் ராணுவ படையிடம் பணய கைதியாக உள்ளார்.

இந்திய மாணவர்
கீவ், டிசம்பர் 22 : உக்ரைன் மற்றும் ரஷ்யா (Ukraine and Russia) இடையே கடந்த சில ஆண்டுகளாக மிக கடுமையான போர் நிலவி வருகிறது. அதாவது இந்த இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டு இதுவரை 1,397 நாட்கள் ஆகின்றன. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த போர் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யா தனது ராணுவத்தில் கட்டாய ஆள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், குஜராத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தான் கட்டாயமாக ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதில் நீடிக்கும் சிக்கல்
உக்ரைன் – ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர மிக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் குறித்து 28 நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் முடிவுக்கு வராமல் நீண்டுக்கொண்டே செல்கிறது.
இதையும் படிங்க : விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பை…ரூ.1.08 லட்சத்துக்கு வாங்கிய நபர்…காத்திருந்த அதிர்ச்சி!
உக்ரைன் கைதியாக மாறிய குஜராத் மாணவர்
உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யா தனது ராணுவ படைக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. இதன் காரணமாக அதிக சம்பளம் தருவதாக கூறியும், பலரை கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்தாகவும் ரஷ்யா மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், குஜராத் மாணவர் ஒருவர் ரஷ்யாவின் ராணுவ படையில் கட்டாயமாக இணைக்கப்பட்ட நிலையில், தற்போது உக்ரைன் கைதியாக உள்ளார்.
இதையும் படிங்க : தொடங்கியது பதிலடி.. சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
குஜராத்தை சேர்ந்த முகமது ஹுசைன் என்ற மாணவர் ரஷ்யாவுக்கு உயர் கல்வி படிக்க சென்றுள்ளார். அவர் ரஷ்யா ராணுவத்தில் சேர்ந்த நிலையில், தற்போது உக்ரைன் படையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னை மீட்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்றை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.