Year Ender 2025: காலநிலை மாற்றத்தால் உலகை உலுக்கிய கடுமையான பேரிடர்கள்!!
Year-Ender 2025: காலநிலை மாற்றம் இன்று ஒரு எதிர்கால அச்சுறுத்தல் அல்ல; அது மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் தற்போதைய உண்மை. உலக வெப்பமயமாதல், கடல் மட்ட உயர்வு, மழை முறை மாற்றம் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் கடுமையான பேரிடர்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
2025ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிகக் கடுமையான காலநிலை மாற்ற விளைவுகள் ஏற்பட்ட ஒரு ஆண்டாக பதிவாகியுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம் தீவிரமடைந்ததன் விளைவாக, உலகின் பல பகுதிகளில் வெள்ளம், வெப்பஅலை, புயல், காட்டுத்தீ மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் நிகழ்ந்து ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டுள்ளது. முன்பு வெறும் முன்னெச்சரிக்கையாக இருந்து வந்த கலாநிலை மாற்றம் என்ற சொல் அஞ்சியபடி தற்காலத்தில் நிதர்சனமான ஒன்றாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளை உலகம் எதிர்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பெரும்பாலான இயற்கை பேரிடர்களுக்கு விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தையே முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றனர். அதன்படி காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கத்தால் இந்தாண்டு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஐரோப்பிய வெப்பஅலைகள்:
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் வரை ஐரோப்பா முழுவதும் கடும் வெப்பஅலை தாக்கியது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் பகுதிகளில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. இதன் விளைவாக அல்பேனியா, போஸ்னியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டது. காலநிலை மாற்றம் காரணமாக மட்டும் ஐரோப்பாவில் 16,500 பேர் உயிரிழந்ததாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
‘திட்வா’ புயல் (Cyclone Ditwah)
இந்தியப் பெருங்கடலில் உருவான இந்த புயல் இலங்கை மற்றும் தென் இந்தியாவில் கரையைக் கடந்தது. அதிக பாதிப்பு இலங்கையில் ஏற்பட்டது. பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார சேதம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் வெள்ளம்:
ஜூன் மாதத்தில் தொடங்கிய கடும் பருவமழை காரணமாக பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
‘சென்யார்’ புயல் (Cyclone Senyar)
மலாய் தீபகற்பம் மற்றும் சுமத்திராவில் கனமழை பெய்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. மணிக்கு 85 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. சுமார் 2,100 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது. மொத்த சேதம் 20 பில்லியன் டாலரை எட்டியது.
மோக்வா வெள்ளம் – நைஜீரியா:
கனமழையால் அணை மற்றும் பழைய ரயில் தடுப்பு உடைந்து, மோக்வா நகரம் முழுவதும் நீரில் மூழ்கியது. 500 பேர் உயிரிழந்ததுடன், 600 பேர் காணாவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா – பாகிஸ்தான் வெப்ப அலை:
ஏப்ரல் மாதம் தொடங்கி இந்திய துணைக்கண்டம் முழுவதும் கடும் வெப்பம் நிலவியது. ராஜஸ்தானில் 48 டிகிரி செல்சியஸ் பதிவானது. இந்தியாவில் மட்டும் இரண்டு மாதங்களில் 455 பேர் உயிரிழந்தனர்.
தாராசின் நிலச்சரிவு – சூடான்:
மேற்கு சூடானின் தர்ஃபூர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு முழு கிராமமே அழிந்தது. இரண்டு கட்டங்களாக நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் 375 முதல் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
தென் கலிபோர்னியா காட்டுத்தீ:
ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட 14 காட்டுத்தீ 57,529 ஹெக்டேர் நிலப்பரப்பை எரித்தன. 440 பேர் உயிரிழந்தனர்; 31 பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
டெக்சாஸ் வெள்ளம்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், 135 பேர் உயிரிழந்தனர். சுமார் 1 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. 2025 ஆம் ஆண்டு, காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உலகம் உணர்ந்த ஒரு எச்சரிக்கை ஆண்டாக அமைந்தது.