வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை.. நீதிமன்றம் உத்தரவு!

Former Bangladesh PM Sheikh Hasina : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து வங்கதேசத்தின் குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் ஷேக் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை.. நீதிமன்றம் உத்தரவு!

ஷேக் ஹசீனா

Updated On: 

02 Jul 2025 16:20 PM

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Former Bangladesh PM Sheikh Hasina)  6 மாதம் சிறை தண்டனை (Sheikh Hasina 6 Month Sentence) விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சர்வதேக குற்றவியல் தீர்ப்பாயம், ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இந்த தண்டனையைப் பெற்றுள்ளார். வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. 2024ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டங்கள் வெடித்தது. போராட்டம் நாளுக்கு நாள் வன்முறையாக மாறியது. இதில் பலரும் உயிரிழந்து இருக்கின்றனர். அப்போது, பிரதமர் அலுவலகத்தை கூட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான போராட்டங்கள் ஷேக் ஹசீனாவுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதனை அடுத்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து, வங்கதேசத்தில் இருந்து வெளியேறி, தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனஸ் உள்ளார். இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் முதல்வர் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை

ஹசீனாவுக்கான தண்டனையை வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 1-இன் தலைவர் நீதிபதி எம்.டி. கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு விதித்துள்ளது. ஹசீனாவின் தண்டனை அவர் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த நாளிலிருந்து அமலுக்கு வரும்.

இவர் மட்டுமின்றி, வங்கதேசத்தில் காய்பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஷகில் அகந்த் புல்புல் என்பவருக்கு இதே வழக்கில் இரண்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டாக்காவைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் ஷகில் அகந்த் புல்புல். அவர் அவாமி லீக்கின் மாணவர் பிரிவான பங்களாதேஷ் சத்ரா லீக் உடன் தொடர்புடையவர். இவர் 2024ஆம் ஆண்டு அக்டோபரில் ஷேக் ஹசீனா மற்றும் புல்புல் இடையே நடந்த உரையாடல் வெளியானது.

அதன் அடிப்படையில், ஷேக் ஹசீனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த உரையாடலில் ஹசீனா அச்சுறுத்தும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் கூறினார். இது நீதிமன்ற அவமதிப்பாகும் எனவும் வாதிடப்பட்டது. இதனை அடுத்து, அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், அவர் தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

2024 ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா, இன்னும் வங்கதேசம் செல்லவில்லை. எனவே, அவர் கைது செய்யப்பட்டாலோ அல்லது சரணடைந்தலோ தான், அவருக்கான தண்டனை அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.