இனி இணைய வசதி இல்லாமல் ஸ்மார்ட்போனில் லைவ் டிவி பார்க்கலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!
Direct To Mobile Feature Under Test | தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பல்வேறு வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள் வெளிவர தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஸ்மார்ட்போனில் இணைய வசதி இல்லாமல் லைவ் டிவி பார்க்கும் அம்சம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.
செல்போன் இருந்தால் இந்த உலகமே உள்ளங்கையில் அடங்கிவிடும் என்று கூறுவார்கள். அது நூறு சதவீதம் உண்மை. காரணம் தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் மூலம் அனைத்துமே சாத்தியமாகிவிடுகிறது. முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை தற்போது ஸ்மார்ட்போன்களின் உதவியுடன் மிக எளிதாகவும், விரைவாகவும் செய்துவிட முடிகிறது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன்கள் இல்லாத நபர்களை பார்ப்பதே கடினமாக உள்ளது. ஸ்மார்ட்போன்களின் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் டிவி பார்ப்பதையே மறந்துவிட்டனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போனில் லைவ் டிவி பார்க்கும் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் இணைய வசதி இல்லாமல் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி இணைய வசதி இல்லாமல் ஸ்மார்ட்போனில் லைவ் டிவி பார்க்கலாம்
ஸ்மார்ட்போனில் லைவ் டிவி சேவையை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டைரக்ட் டு மொபைல் (Direct To Mobile) என்ற புதிய தொழில்நுட்பத்தை அமலுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய தொலைத்தொடர்புத் துறை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் லைவ் டிவி (Live TV) நிகழ்ச்சிகளை மொபைல் போனில் இணைய வசதி இல்லாமலே பார்வையாளர்கள் கண்டுகளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த குரோக் ஏஐ.. எலான் மஸ்க் நிறுவனத்துக்கு 72 மணி நேர கெடு!
இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் இந்தியாவில் உள்ள 19 நகரங்களில் அமலுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் இணைய வசதி இல்லாமல் இயங்கும் என கூறப்படுவது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இந்த அம்சத்தில் நேரடியாக செயற்கைக்கோள் மூலம் லைவ் செல்போன்களுக்கு வழங்கப்படும்.
செயற்கைக்கோளில் இருந்து எப்படி ஸ்மார்ட்போனுக்கு லைவ் டிவி வரும்
இந்த லைவ் டிவி அம்சத்தை பெறும் வகையில் ஸ்மார்ட்போன்களில் ஒரு சிப் பொருத்தப்படும். ரேடியோ ஸ்டேஷன்களில் இருந்து வரும் சிக்னலை ரிசீவர் பிடித்து எப்படி ஒலிபரப்பு செய்கிறதோ, அதே மாதிரி டிவி சேனல்களின் சிக்னலை இந்த சிப்கள் பிடித்து வீடியோவை பரப்பும். இதற்காக சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.