தவெக மாநாடு.. பேனர் வைக்க முயன்ற மாணவர்.. மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!
TVK Madurai Conference : விருதுநகரில் கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். தமிழக வெற்றிக் கழக மாநாட்டை வரவேற்கும் வகையில், பேனர் அமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சார தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞர்
விருதுநகர், ஆகஸ்ட் 20 : விருதுநகர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்காக (TVK Madurai Conference) பேனர் வைக்க முயன்றபோது, கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரையில் பாரபத்தியில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி (நாளை) பிற்பகல் 3.15 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு மேடைக்கு முன்பு ஐந்து லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. மேலும், தொண்டர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிவறை, குடிநீர், பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
தவெக மாநாடு
மேலும், தவெக தலைவர் மதுரையில் முகாமிட்டு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். அதோடு இல்லாமல், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் விஜய் ராம்ப் வாக் செல்ல மாநாட்டு மேடையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.ஜி.ஆர், அண்ணா, அஞ்சலை அம்மாள் ஆகிய கொள்கை தலைவர்களின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.. 1967, 1977, 2026 உங்க விஜய் நான் வரேன்.. வெற்றி பேரணியில் தமிழ்நாடு எனக் குறிப்பிட்டு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
Also Read : மதுரை தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்!
இதுயெல்லாம் ஒருபக்கம் இருக்க, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் வைத்து வருகின்றனர். குறிப்பாக, மதுரை மற்றும் அதனை சுற்றுவட்டார மாவட்டங்களில் தவெக மாநாட்டிற்கு பேனர்கள் வைத்து வருகின்றனர். இதனால், மதுரை மாவட்டம் முழுவதும் விழாகோலம் பூண்டுள்ளது. இப்படியான சூழலில், விருதுநகரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பிரதான சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரவேற்றும் விதமாக பேனர்கள் வைக்கும் பணிகளில் காளீஸ்வரன் ஈடுபட்டு வந்தார்.
Also Read : மதுரையில் தவெக மாநாடு.. முன்னேற்பாடுகள் தீவிரம்.. விஜய் பேசப்போவது என்ன?
அப்போது, அந்த இடத்தில் கம்பியை எடுத்தபோது, எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் கல்லூரி மாணவர் காளீஸ்வரன் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கல்லூரி மாணவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.