இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து.. தந்தை மகன் உயிரிழந்த சோகம்..
வேன் மோதியதில் இருவரும் பல அடிகள் தூரம் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் அவர்கள் கீழே விழுந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

கோப்பு புகைப்படம்
விழுப்புரம், ஏப்ரல் 24, 2026: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெரியாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 63). இவருக்கு செல்வநம்பி (வயது 48) என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பெரியாண்டப்பட்டு கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக ஒரு வேன் வந்துகொண்டிருந்தது. திடீரென அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து, தந்தை மற்றும் மகன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து:
வேன் மோதியதில் இருவரும் பல அடிகள் தூரம் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் அவர்கள் கீழே விழுந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மயிலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தந்தை மகன் உயிரிழந்த சோகம்:
மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேன் ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து கேட்டு அறிந்து வருகின்றனர். இந்த விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் ஆரம்பமானது கோடை மழை: எந்தெந்த மாவட்டங்களில் ..?
லாரி மீது மோதிய பேருந்து:
இதே போல் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், கோவை மாவட்டத்தில் இருந்து வழக்கம் போல தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி கூறப்பட்டது. பேருந்தை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டினார். இந்த பேருந்தானது ஏப்ரல் 22 காலை கோவில்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது, மூப்பனம்பட்டி அருகே திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில், பேருந்தானது சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்தின் உள்ளே பயணித்த பயணிகள் பலத்த காயம் அடைந்து அச்சத்தில் அலறினர். உடனே, அருகில் இருந்தவர்கள் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆகியோர் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, கோவில்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.