விசாரணைக்கு டெல்லி செல்லும் விஜய்.. பாதுகாப்பு கேட்கும் தவெக..
TVK seeks security: டெல்லி செல்லும் விஜய்க்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு டெல்லி காவல்துறைக்கு தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நாளை (ஜனவரி 12) காலை டெல்லி வரும் விஜய், நாளை மறுநாள் (ஜனவரி 13) சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி செல்லும் விஜய்
டெல்லி, ஜனவரி 11: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக நாளை டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு டெல்லி காவல்துறைக்கு தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையும் படிக்க: தவெகவின் அடுத்த பொதுக்கூட்டம்.. அடுத்தடுத்த தடை.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்..
டெல்லியில் விஜய் ஆஜராக சிபிஐ சம்மன்:
அதன்படி, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை சேகரித்த சிபிஐ அதிகாரிகள், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், காவல் துறையினர் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். கடந்த டிசம்பர் மாதம் 29 மற்றும் 30 என இரண்டு நாட்கள் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் வரும் ஜனவரி 12ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நாளை காலை டெல்லி செல்கிறார் விஜய்:
இது அரசியல் ரீதியாக பெரிதும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. விஜய்யை சிபிஐ அழைத்து விசாரிக்கிறது என ஒருபுறம் பரபரப்பாக பேசினாலும், இது வழக்கமான நடைமுறை மட்டுமே. குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரை சேர்ப்பார்களா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே, விஜய் நாளை காலை டெல்லி செல்கிறார்.
போலீஸ் பாதுகாப்பு கேட்கும் தவெக:
இதையொட்டி, டெல்லி செல்லும் விஜய்க்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு டெல்லி காவல்துறைக்கு தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நாளை (ஜனவரி 12) காலை டெல்லி வரும் விஜய், நாளை மறுநாள் (ஜனவரி 13) சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் 2 நாட்கள் விசாரணை நடந்தது போல் விஜய்யிடமும் 2 நாட்கள் விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தவெக கட்சி நிகழ்ச்சிகள் திடீர் ஒத்தி வைப்பு?அப்செட்டில் விஜய்…என்ன காரணம்!
இதன் காரணமாக டெல்லியில் விஜய் தங்கும் இடத்தில் பாதுகாப்பு தேவை என தவெக நிர்வாகி நிர்மல் குமார் தரப்பில் டெல்லி காவல்துறையிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.