முதல் முறையாக தமிழகத்திற்கு வருகை தரும் துணை குடியரசு தலைவர்.. ப்ளான் என்ன?
Vice President C.P. Radhakrishnan Visit To Tamil Nadu: சி. பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றதிலிருந்து முதல் முறையாக தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். அக்டோபர் 27, 2025 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வருகிறார். சென்னையில் தமிழக பாஜக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

கோப்பு புகைப்படம்
டெல்லி, அக்டோபர் 23, 2025: இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் வரும் அக்டோபர் 27, 2025 அன்று நான்கு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தருகிறார். துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தருகிறார். இதற்கு முன்னதாக, துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல் நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று புதிய துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணித் தரப்பில் சி. பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதே சமயத்தில், இந்தியா கூட்டணித் தரப்பில் சுதர்சன ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் சி. பி. ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் படிக்க: சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்!
தமிழகம் வருகை தரும் துணை ஜனாதிபதி:
சி. பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றதிலிருந்து முதல் முறையாக தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். அக்டோபர் 27, 2025 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வருகிறார். அன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கி, பின்னர் தமிழக பாஜக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் படிக்க: ரயில் பணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4வது வழித்தடம்.. ரூ. 757 கோடி மதிப்பில் திட்ட ஒப்புதல்..
அதைத்தொடர்ந்து, அக்டோபர் 28, 2025 அன்று சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படுகிறார். அங்கும் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. அதன் பிறகு அங்குள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர், அக்டோபர் 29, 2025 அன்று சொந்த ஊரான திருப்பூருக்கு செல்கிறார். அங்கும் மாநில பாஜக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
தேவர் ஜெயந்தியில் பங்கேற்கும் துணை ஜனாதிபதி:
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 30, 2025 அன்று மதுரைக்கு புறப்பட்டு, அங்கிருந்து பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்த பின் அவர் மதுரையில் இருந்து டெல்லிக்குத் திரும்புகிறார். துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனின் நான்கு நாள் தமிழகப் பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.