பரபரப்பை ஏற்படுத்திய கோவை மாணவி வழக்கு: இன்று வெளியாகும் தீர்ப்பு

College Student Assault Case: கோவை பீளமேடு விமான நிலையம் அருகே நடந்த கல்லூரி மாணவி தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. மூன்று பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் 270 பக்க குற்றப்பத்திரிகை மற்றும் 112 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர்.

பரபரப்பை ஏற்படுத்திய கோவை மாணவி வழக்கு: இன்று வெளியாகும் தீர்ப்பு

கோப்புப்படம்

Published: 

07 Mar 2026 11:49 AM

 IST

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற கல்லூரி மாணவி தாக்குதல் வழக்கில் இன்று 2026 மார்ச் 07 முக்கிய தீர்ப்பு வெளியாகிறது. தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்த இந்த வழக்கில், கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் 2026 மார்ச் 07 இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

கார் அருகே ஏற்பட்ட சம்பவம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி இரவு, கோவை பீளமேடு விமான நிலையத்தின் பின்புறம் 21 வயதான கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மது போதையில் வந்த மூன்று பேர் காரின் கதவை திறக்கும்படி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் திறக்க மறுத்ததால், காரின் கண்ணாடியை உடைத்து கதவை திறந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டு

அப்போது அந்த பெண்ணை தொட முயன்றபோது, மாணவியின் ஆண் நண்பர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் அவரை கடுமையாக தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தாக்குதலில் அவர் மயங்கிய நிலையில், அந்த மாணவியை அங்கிருந்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

போலீசில் அளிக்கப்பட்ட புகார்

இதற்கிடையில் மயக்கம் தெளிந்த ஆண் நண்பர், மாணவியை தேடி பார்த்து பின்னர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அருகிலிருந்த சுவரின் பின்னால் இருந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.

மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம்

சிசிடிவி காட்சிகளில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன்பேரில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் என்கிற கருப்பசாமி (30), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் (21), மற்றும் மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்பட்ட நிலையில் துடியலூர் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

Also Read: சிரித்துப் பேசி சீரழித்த வீட்டு உரிமையாளர்: கதறிய மாணவி… சிக்கிய மர வியாபாரி!

விசாரணை மற்றும் ஆதாரங்கள்

இந்த வழக்கில் 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள், மரபணு பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கில் மொத்தம் 112 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில் மாணவி, அவரது ஆண் நண்பர் மற்றும் மாணவியின் தாய் உள்ளிட்ட பலர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தனர்.

இன்று வெளியாகும் தீர்ப்பு

21 நாட்களில் விசாரணை நிறைவடைந்த நிலையில், இரு தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் 2026 மார்ச் 07 இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். நீதிபதி சுந்தர்ராஜன் இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிக்க உள்ளார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதால் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி