Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” – விசிக தலைவர் திருமாவளவன்..

Thirumavalavan: திருச்சியில் நடந்த விசிகவின் பேரணியில் தலைவர் திருமவளவன், ” மதம் மக்களுக்கு ஆனது மட்டுமே தவிர அரசியலுக்கானது இல்லை. எனவே மதசார்பின்மை என்பது மிகவும் முக்கியம். இந்தியாவின் மதமாக இந்து மதத்தை அறிவிக்க முடியாது. ஏனென்றால் இந்து மதத்தில் சகோதரத்துவம் கிடையாது” என தெரிவித்துள்ளார்.

”மதம் மக்களுக்கானது, அரசியலுக்கானது இல்லை” – விசிக தலைவர் திருமாவளவன்..
திருமாவளவன்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Jun 2025 19:32 PM

விசிக பேரணி: வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. டிவிஎஸ் டோல்கேட்டில் தொடங்கி சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை இந்த பேரணி நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் இந்த பேரணி ஆனது நடைபெற்றது. இதில் வீசிக தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமான மக்கள் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ இந்த பேரணி ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறது எல்லாவற்றையும் விட முதன்மையானது தேசம் தான். 2026 சட்டமன்ற தேர்தல், கூட்டணி ,தொகுதி பங்கீடு இவற்றை எல்லாவற்றையும் விட தேசம் தான் முதன்மையானது. தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்றால் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்

மதத்திற்கு எதிராக பகையை வளர்க்க கூடாது:


தொடர்ந்து பேசிய அவர், “ செக்யூலரிசம் ஃபெடராலிசம் தாண்டி நான்கு அடிப்படை கோடுகள் உள்ளது நீதி சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகும். இதுதான் அம்பேத்கர் வகுத்தது. இதன் அடிப்படையில் தான் புதிய இந்தியாவை கட்டமைக்க போகிறோம். அதுதான் அம்பேத்கர் உருவாக்க நினைத்த இந்தியா. அந்த இந்தியாவில் ஜாதி, ஆண் பெண் பேதம், உயர்வு தாழ்வு என எதுவும் இருக்காது. செக்யூலரிசம் என்பது எந்த மதத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது, மட்டுமல்லாமல் எந்த மதத்தையும் எதிர்க்கக் கூடாது, எந்த மதத்திற்கு எதிராக பகையையும் வளர்க்கக்கூடாது.

தேர்தலில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது பிரச்சனை கிடையாது. ஆனால் நமது கொள்கையில் உறுதியாக இருக்கிறோமா என்பது தான் முக்கியம். அம்பேத்கரின் கொள்கைகளுக்கு யார் துரோகம் நினைத்தாலும் சிறுத்தைகள் துரோகம் செய்ய மாட்டோம். பாஜக அல்லது பிரதமர் மோடி மீது எங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. ஆனால் அம்பேத்கர் அரசியலை பேசினால் பாஜகவை வேண்டாம் என சொல்லும் நிலை உள்ளது. மேலும் பாஜகவை தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவிலிருந்து விரட்டி அடிக்க வேண்டிய தேவை உள்ளது.

மதம் அரசியலுக்கானது இல்லை:

இந்த பிரம்மாண்ட பேரணி மூலம் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். மதம் மக்களுக்கு ஆனது மட்டுமே தவிர அரசியலுக்கானது இல்லை. எனவே மதசார்பின்மை என்பது மிகவும் முக்கியம். இந்தியாவின் மதமாக இந்து மதத்தை அறிவிக்க முடியாது. ஏனென்றால் இந்து மதத்தில் சகோதரத்துவம் கிடையாது. இதைத்தான் அம்பேத்கரும் சொன்னார். இதனையே காந்தியும் ஏற்றுக்கொண்டார். வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் குடியுரிமை திருத்தச் சட்டம் இவை இரண்டும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே எதிரானது என கடந்து செல்ல முடியுமா ஒருபோதும் இதனை அனுமதிக்க மாட்டோம்” என பேசியுள்ளார்.