ஓசூர் விமான நிலைய திட்டம்…மீண்டும் மீண்டும் தடை போட்ட மத்திய அரசு…என்ன காரணம்!
Hosur Airport Plan : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கும் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் 3- ஆவது முறையாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது .

ஓசூர் விமான நிலைய திட்டம் மீண்டும் நிராகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தொழில் வளர்ச்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், அங்கு சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறுவது, இந்திய விமான நிறுவனத்தின் கள ஆய்வு உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. அதன்படி, விமான நிலையம் அமைப்பதற்காக பாகலூர் மற்றும் பேரிகை இடையே உள்ள சூளகிரி பகுதியில் 2,300 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2025- ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக வான்வழி பகுதிக்கு அனுமதி கோரி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நிராகரித்திருந்தது.
3- ஆவது முறையாக தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
இதைத் தொடர்ந்து, மீண்டும் தமிழகத்தின் தலைமைச் செயலர் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்து இருந்தது. இந்த நிலையில், 3- ஆவது முறையாக தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த ஓசூர் விமான நிலையம் அமைக்கும் கோரிக்கையை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக, அமைச்சகம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ஓசூரை சுற்றி உள்ள வான் பகுதி ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் லிமிடெட் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் படிக்க: சிபிஐ விசாரணை…விஜய் இன்று மாலை டெல்லி புறப்படுகிறார்!
பயணிகள் விமான போக்குவரத்துக்கு அனுமதி இல்லை
எனவே, இந்தப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் சோதனை விமானங்கள் பறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த பகுதியில் பயணிகள் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும், ஓசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான வான்வெளி அனுமதியை வழங்க முடியாது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சைட் கிளியரன்ஸ், கொள்கை ரீதியான ஒப்புதல் ஆகியவற்றை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசு பெற வேண்டும்.
விமான நிலையத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு
அதன் பின்னர் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் வான்வெளி தொடர்பான அனுமதி பெற வேண்டும். இதற்கான அனுமதி கிடைத்த பின்னரே ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியும். இதனிடையே, ஓசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தப்படும் என்பதால் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: காங்கிரஸ் தலைமை பேச்சை மீறிய மாணிக்கம் தாகூர் எம்.பி.? மீண்டும் டிவிட்டரில் கருத்து பதிவு!