வேலூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு – 2 தொழிலாளர்கள் பரிதாப பலி
Gas Leak Incident : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு என்ற ஊரில் உள்ள தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
வேலூர், ஜனவரி 24 : வேலூர் (Vellore) மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலையில் திடீர் வாயுக் கசிவு ஏற்பட்டு, இரு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பாக்கலப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆசான் பாஷா என்பவருக்குச் சொந்தமான இந்த தோல் தொழிற்சாலை, வழக்கம்போல் ஜனவரி, 24, 2026 அன்று காலை இயங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ஒரு இயந்திரத்தில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 2 தொழிலாளர்கள் பலி
இந்த நிலையில் தொழிலாளர்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், தொழிற்சாலைக்குள் உள்ள ஒரு இயந்திரத்திலிருந்து திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஷேக் அலி (58) மற்றும் ஜமால் பாஷா (41) ஆகிய இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
இதையும் படிக்க : அடுத்த வாரம் திருமணம்…பத்திரிகை கொடுக்க சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்..எமனாக மாறிய வேன்!
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல், தொழிற்சாலை ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த இரு தொழிலாளர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக பேரணாம்பட்டு காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க : கோவையில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம்…கைதான மாணவர் பரபரப்பு வாக்குமூலம்!
காவல்துறையினர் தீவிர விசாரணை
இந்த விபத்து குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “பாக்கலப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணம் என்ன? தொழிற்சாலையில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ஷேக் அலி மற்றும் ஜமால் பாஷாவின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இயந்திரத்தில் எவ்வாறு வாயுக் கசிவு ஏற்பட்டது? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ள நிலையில், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.