மணலி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு.. மூச்சு திணறல், குமட்டல், கண் எரிச்சலால் பொது மக்கள் அவதி..
Manali Ammonia Gas Leak: மணலியில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான ஒரு தொழிற்சாலையில், பயிர்களுக்கு தேவையான உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் முக்கிய மூலப்பொருள் அமோனியாவாகும். யூரியா உற்பத்தி பிரிவில் திட்டமிடப்படாத பணி நிறுத்தம் அல்லது அழுத்த நிவாரண வால்வுகளின் மூலம் அது வெளியேறி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை, நவம்பர் 5, 2025: சென்னை மணலியில் இயங்கி வரும் உரத் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதால், அப்பகுதி மக்களிடையே கடுமையான மூச்சுத்திணறல், கண் எரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. இந்த வாயு கசிவு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்ததாகவும், இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணலியில் உரத் தொழிற்சாலை மட்டுமல்லாமல், பிற தொழிற்சாலைகளும் அப்பகுதியில் இயங்கி வருகின்றன. மணலியைப் பொருத்தவரையில் அமோனியா வாயு கசிவு என்பது புதிதல்ல; இது அவ்வப்போது நடைபெறும் ஒன்றுதான் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அமோனியா வாயு கசிவு தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணலியில் அமோனியா வாயு கசிவு:
மணலியில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான ஒரு தொழிற்சாலையில், பயிர்களுக்கு தேவையான உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் முக்கிய மூலப்பொருள் அமோனியாவாகும். யூரியா உற்பத்தி பிரிவில் திட்டமிடப்படாத பணி நிறுத்தம் அல்லது அழுத்த நிவாரண வால்வுகளின் மூலம் அது வெளியேறி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: இன்று நடக்கும் த.வெ.க சிறப்பு பொதுக்குழு கூட்டம்.. மாஸ்டர் பிளான் போடும் விஜய்? நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்ன?
உற்பத்தியில் அமோனியா என்பது ஒரு முக்கிய மூலப்பொருள் என்பதையும், இந்த அமோனியா வாயு கசிவு சிறிய அளவிலேயே ஏற்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுற்றுப்புற காற்று கண்காணிப்பு நிலையங்களில் எந்தவித அசாதாரண அமோனியா அளவும் பதிவாகவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடும் அவதிக்கு உள்ளான மக்கள்:
நவம்பர் 4, 2025 தேதியான நேற்று இரவு, இந்த தொழிற்சாலை அருகே உள்ள ரவுண்டானா சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு துர்நாற்றம், கண் எரிச்சல், குமட்டல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். மேலும், அந்தப் பகுதியில் வழியாக சென்ற பொதுமக்கள் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு கடந்து சென்றனர்.
மேலும் படிக்க: 9 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்… ரத்த காயங்களுடன் மருத்துமனையில் அனுமதி – சென்னையில் பரபரப்பு
அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் முகத்தில் துணி கட்டிக்கொண்டு பணியைத் தொடர்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமோனியா வாயு கசிவு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர்.