இன்று சீரடி செல்கிறார் விஜய்?.. தேர்தல் முடிவுகளுக்கு முன்பு அடுத்தடுத்த ஆன்மீகப் பயணத்திற்கு திட்டம்..
TVK VIjay Spiritual Journey: Tamilnadu தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 4.7 கோடிக்கும் அதிகமானோர் இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த அதீத வாக்குப்பதிவுக்கு நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும் ஒரு முக்கியக் காரணம் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

தவெக தலைவர் விஜய்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மீகப் பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த கையோடு, விஜய் தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார். அதன் முதல் கட்டமாக, ஏப்ரல் 28-ம் தேதி அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அவர் தரிசனம் செய்தார்.
மேலும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..
விஜய் செய்த ‘சத்ரு சம்ஹார’ பூஜை:
அங்கு கடற்கரையில் பாரம்பரிய உடையில் வழிபாடு நடத்திய விஜய்க்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு அவர் எதிரிகளை வெல்லவும் தடைகள் நீங்கவும் செய்யப்படும் ‘சத்ரு சம்ஹார’ பூஜையில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடக ராசிக்காரரான விஜய், திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் அரசியல் ரீதியான தடைகள் நீங்கி வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழிபாட்டை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீரடி சாய் பாபா தரிசனம்:
திருச்செந்தூரைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 29) விஜய் மகாராஷ்டிர மாநிலம் சீரடிக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காகத் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் அவர், அங்குள்ள சாய் பாபா கோவிலில் தரிசனம் செய்கிறார். முன்னதாக மே 3-ம் தேதி அவர் அங்கு செல்வதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அங்கு செல்கிறார். தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக அவர் மேற்கொள்ளும் இந்தத் தொடர் ஆன்மீகப் பயணங்கள், அவரது அரசியல் வாழ்வின் அடுத்தகட்ட வெற்றிக்கான வேண்டுதலாகவே பார்க்கப்படுகிறது.
2026 தேர்தலில் வாக்குப்பதிவு சாதனை:
தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 4.7 கோடிக்கும் அதிகமானோர் இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த அதீத வாக்குப்பதிவுக்கு நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும் ஒரு முக்கியக் காரணம் என்று ஒரு தரப்பினர் கருதுகின்றனர். குறிப்பாக, மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளம்பெண்களின் வாக்குகள் அதிகளவில் தவெக-விற்கு விழுந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
அடுத்தடுத்த நகர்வுகள்: 5 முக்கிய கோவில்கள்?
விஜய் தனது தலைமைப் பண்பை உயர்த்தவும், அரசியல் தடைகளை உடைக்கவும் தமிழகத்தின் மேலும் சில முக்கிய கோவில்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக திருவண்ணாமலை, திருவாரூர், பழனி, மயிலாடுதுறை மற்றும் சென்னையில் உள்ள புகழ்பெற்ற தலங்களுக்கு அவர் செல்லக்கூடும் எனப் பேசப்படுகிறது.