“பொறாமையால் பாதிக்கப்பட்ட இளைஞன்”.. குட்டி கதை சொன்ன விஜய்

பைபிளில் இருந்து யோசேப்பின் (ஜோசப்) கதையை எடுத்துக்காட்டாக கூறி பேசிய அவர், அந்த இளைஞர் மீண்டு வந்து ஒரு நாட்டுக்கே அரசனாகி, சகோதரர்களையும் காப்பாற்றினார். கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும், அது நம்மை வழிநடத்தும் என்றார். சமூக, சமய நல்லிணக்கத்தை காப்பதில் 100% உறுதியாக இருப்போம் என உறுதி அளிக்கிறேன் என்றார்.

பொறாமையால் பாதிக்கப்பட்ட இளைஞன்.. குட்டி கதை சொன்ன விஜய்

தவெக தலைவர் விஜய்

Updated On: 

22 Dec 2025 13:47 PM

 IST

சென்னை, டிசம்பர் 22: பொறாமையால் பாதிக்கப்பட்ட இளைஞன் குறித்த கதையை கூறி தவெக தலைவர் விஜய் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் பேசினார். அதோடு, அந்த குறிப்பிட்ட கதை யாரைப்பற்றிய கதை என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று (டிசம்பர் 22, 2025) மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்டஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க QR குறியீட்டுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, அதனை வைத்திருப்பர்வகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி சீட்டு இல்லாதவர்களுக்கு விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல், நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி மேடையின் கீழ் அமர வைக்கப்பட்டிருந்தனர். விஜய் மட்டும் வந்திருந்த பாதிரியார்களுடன் மேடையில் அமர்ந்திருந்தார்.

மேலும் படிக்க : திமுகவை விமர்சிக்காமல் எந்த கட்சியும் அரசியலில் இருக்க முடியாது…செந்தில் பாலாஜி!

தாய் அன்பு கொண்ட மண் தானே தமிழ்நாடு:

இவ்விழாவில் பேசிய விஜய், “அன்பும், கருணையும் தானே அனைத்திற்கும் அடிப்படை, இவை இரண்டும் இருப்பது தானே தாய் மனது. நம் தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட மண் தானே, தாய் அன்பு கொண்ட மண் தானே. ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தானே, அதனால் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளையும் அனைவரும் மகிழ்ச்சியாக பகிர்ந்துக்கொள்ளும் ஓர் ஊர் தானே நம் ஊர். இங்கு வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறுவேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள் தானே” என்றார்.

கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்தது ஏன்?

நான் அரசியலுக்கு வந்ததும் கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்தது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கச் சொல்லி தரும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தாலே போதும், எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் ஜெயிக்கலாம். அப்படிப்பட்ட நம்பிக்கையோட பலத்தை பற்றி கூற, பைபளில் நிறைய கதைகள் உள்ளன. அதில் குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டுமென்றால் என்று, பைபிளில் இருந்து யோசேப்பின் (ஜோசப்) கதையை எடுத்துக்காட்டாக கூறினார்.

விஜய் சொன்ன குட்டி கதை:

ஒரு இளைஞனுக்கு எதிராக சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு பாழும் கிணற்றில் தள்ளிவிட்ட கதை உண்டு. அந்த இளைஞர் மீண்டு வந்து, அந்த நாட்டுக்கே அரசனாகி, துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமல்ல, நாட்டையும் காப்பாற்றினார். அந்த கதை யாரைப் பற்றிய கதை என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. எவ்வளவு பெரிய எதிரிகளையும் நாம் வெல்லலாம் என்ற உறுதியை அந்த கதைகள் நமக்கு கற்று தருகின்றன. மக்களை மானசீகமாக நேசிப்பவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள் என்றார்.

உறுதியளித்த விஜய்:

மேலும் பேசிய அவர், “இந்த நேரத்தில் நானும், தமிழக வெற்றி கழகமும்  சமூக, சமய நல்லிணக்கத்தை காப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம் என உறுதி அளிக்கிறேன். மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம்.கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும், அது நம்மை வழிநடத்தும் என்றார். சமூக, சமய நல்லிணக்கத்தை காப்பதில் 100% உறுதியாக இருப்போம் என உறுதி அளிக்கிறேன்” என்று உரையை முடித்துக்கொண்டார்.

குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு தெரிவிக்க, பதிலுக்கு அவரும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார். அதோடு, அவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டிய அவர், அதனை குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு அன்பு பகிர்ந்துகொண்டார்.

 

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை