தென்காசியில் தொடரும் கனமழை.. குற்றால அருவிகளில் குளிக்க தடை..

Tenkasi Courtallam Falls: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சிகளில் அதிகப்படியான நீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தென்காசியில் தொடரும் கனமழை.. குற்றால அருவிகளில் குளிக்க தடை..

கோப்பு புகைப்படம்

Published: 

19 Jul 2025 09:46 AM

தென்காசி, ஜூலை 19, 2025: தென்காசியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் இருக்கக்கூடிய மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது முதலே தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. தென்காசியில் இருக்கக்கூடிய பிரதான சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் சீசன் கலை கட்டி தொடங்கியுள்ளது. குற்றாலத்தில் இருக்கக்கூடிய மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசியில் தொடரும் கனமழை:

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் தென்காசி மாவட்டத்தில் இருக்கக்கூடிய குற்றாலத்தில் சீசன் தொடங்கும். இந்த குறிப்பிட்ட சீசனில் ஏராளமான மக்கள் இங்கு வருகை தருவார்கள். மேலும் இந்த அருவிகளில் குளிப்பதால் சளி இருமல் காய்ச்சல் போன்ற உபாதைகள் வராது எனவும், இந்த தண்ணீர் மூலிகை செடிகள் வழியாக கடந்து வருவதால் உடலுக்கு நல்லது எனவும் நம்பப்படுகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையானது ஜூலை 21 2025 வரை அதாவது அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குற்றால அருவிகளில் குளிக்க தடை:

இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சிகளில் அதிகப்படியான நீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் என்பதன் காரணமாக குற்றாலத்திற்கு ஏராளமான மக்கள் படையெடுத்துள்ளனர். ஆனால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: மதுரையில் வரதட்சணை கொடுமை: அடித்து துன்புறுத்திய காவலர் கணவர் கைது..!

குற்றால சாரல் திருவிழா:

இது ஒரு பக்கம் இருந்தாலும் ஜூலை 20, 2025 தேதியான நாளை முதல் குற்றால சாரல் திருவிழா தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா 2025 ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மக்களை கவரும் வகையில் இந்த குற்றால சாரல் திருவிழாவில் நாட்டுப்புற கலைகள், கலாச்சார குழுக்களின் நிகழ்ச்சிகள், அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கும் ஏராளமான போட்டிகள் நடைபெற உள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் நடனம், வில்லுப்பாட்டு, நாடகம், கொடைக்கானல், பூம்பாறையை சேர்ந்த தோடா நடனம், மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியம், பாட்டு மற்றும் கவிதை போட்டி சமையல் போட்டி, பலு தூக்கும் போட்டி, மிஸ்டர் குற்றாலம், நாய் கண்காட்சி என ஏராளமான நிகழ்வுகள் இந்த குற்றால சாரல் திருவிழாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது