தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்.. புதிய திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு..
TN interim budget 2026: தமிழக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, தேர்தல் காரணமாக ஒரே சமயத்தில் ரூ.5,000ஆக 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

கோப்புப் புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 17: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் (Interim Budget) இன்று தாக்கல் சட்டப்பேரவையில் செய்யப்படுகிறது. தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, தேர்தல் காரணமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாத மகளிர் உரிமைத் தொகையுடன், கோடை சிறப்பு தொகை ரூ.2000 என ஒரே சமயத்தில் ரூ.5,000ஆக 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதோடு, திமுக மீண்டும் ஆட்சியை தொடரும்போது உரிமைத்தொகை மாதம் ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இடைக்கால பட்ஜெட்டில் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள்…தங்கம் தென்னரசு தகவல்!
ஆண்டின் முதல்கூட்டத்தொடர்:
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜன.20) தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி , உரையில் இல்லாதவற்றை பேசிவிட்டு வெளியேறினார். அவரது பேச்சு எதுவும் அவைக்குறிப்பில் பதிவாகவில்லை. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜன.22, 23ல் எம்எல்ஏக்கள் விவாதித்தனர். அவர்களின் விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24ல் பதிலளித்துப் பேசினார். அதன் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்:
இந்நிலையில் சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது, தமிழக அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் சபைக்கு அளிக்கப்படும். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை படிப்பார். இதே நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை மற்றும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் ஆகியவை வருகிற 20ம் தேதி சபைக்கு அளிக்கப்பட உள்ளது.
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தொடர் பிப்.20ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் மீது எம்எல்ஏக்கள் விவாதிப்பார்கள். அந்த விவாதங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துப் பேசுவார்.
மே மாதம் முழு பட்ஜெட்:
2021-ம் ஆண்டு மே 7ஆம் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். தேர்தலுக்குப் பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இடம் பெறும்..எகிறும் எதிர்பார்ப்பு!
புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு:
சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு அதிகம். இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.