திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின்..

CM MK Stalin: இன்றைக்கு யார் யாரோ கிளம்பியுள்ளனர்; திமுகவை அழித்து விடலாம் என நினைக்கின்றனர், ஒழித்து விடலாம் என கனவு காண்கின்றனர். இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது என சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின்..

கோப்பு புகைப்படம்

Published: 

07 Nov 2025 13:15 PM

 IST

சென்னை, நவம்பர் 7, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, “திமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது; இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது” என்று குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசியல் சூழலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தைப் பொருத்தவரையில், அதன் முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இந்தச் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மாமல்லபுரத்தில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய தலைவர் விஜய், “2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி என்பது இரண்டு கட்சிகளுக்குமே — திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்துக்குமே தான்” என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தக் கருத்தைத் தொடர்ந்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேனாம்பேட்டையில் திமுக நிர்வாகி செங்குன்றம் ஏழுமலையின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், “‘மிசா’ என்ற கொடுமையான சட்டத்தின் கீழ் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்திருந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் மிசா ஏழுமலையும் ஒருவர். 1971-ஆம் ஆண்டு மிசா சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது. நம்முடைய திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த பலரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க: அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா உள்ளிட்ட 12 பேர் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி..

மிசா காலகட்டத்தில் பத்திரிகைகள் செய்தி எழுத முடியாது; தொலைக்காட்சிகள் விவாதங்கள் நடத்த முடியாது; வெளியே செல்ல முடியாது என பல கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. கலைஞர் அவர்களுக்கு பேசுவதற்குக் கூட இடம் கொடுக்கக்கூடாது என்ற கொடுமைகளும் இருந்தன. அப்போது கலைஞர் வருவதாக இருந்தால், ‘என்னிடம் அரிசி இல்லை, நான் தருகிறேன்’ என கூறியவர் மிசா ஏழுமலை.

இந்த இயக்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது – ஸ்டாலின்:


“இப்போது இதை ஏன் இங்கு உரக்கச் சொல்கிறேன் என்றால் — இன்றைக்கு யார் யாரோ கிளம்பியுள்ளனர்; திமுகவை அழித்து விடலாம் என நினைக்கின்றனர், ஒழித்து விடலாம் என கனவு காண்கின்றனர். இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது,” என தெரிவித்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சட்டப் போராட்டம் ஒரு புறம் நடந்தாலும், இந்தப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய பொறுப்பு நமக்கே உள்ளது,” என தெரிவித்துள்ளார்.