சித்ரா பௌர்ணமி.. தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்.. நோட் பண்ணுங்க!
சித்திரை பௌர்ணமி 2025க்காக சென்னை தாம்பரம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் - திருவண்ணாமலை ரயில் மே 11 அன்று இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க 12 பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்ரா பௌர்ணமி சிறப்பு ரயில்
திருவண்ணாமலை, மே 10: சித்திரை மாத பௌர்ணமியை (Chitra Pournami 2025) முன்னிட்டு திருவண்ணாமலை (Tiruvannamalai) அருணாசலேஸ்வர் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல ஏதுவாக சென்னை தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் 06137 மற்றும் 06138 என்ற எண் கொண்ட மெமு ரயிலானது 2025, மே 11 ஆம் தேதி தாம்பரம் – திருவண்ணாமலை இடையே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க முன்பதிவில்லா பெட்டிகளை கொண்டதாகும். அதன்படி தாம்பரத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் ரயிலானது சரியாக மதியம் 3.30 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ரயிலானது இரவு 8.40 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த மெமு ரயிலானது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
The following Unreserved #MEMU Express #Specialtrains will be operated to clear extra rush of passengers during #Chithrapournami festival at #Tiruvannamalai
Passengers kindly take note!#SouthernRailway pic.twitter.com/XWwRCU9PZR
— Southern Railway (@GMSRailway) May 9, 2025
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 12 பெட்டிகளுடம் இந்த ரயிலானது இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு ரயிலானது அறிவிக்கப்பட்டுள்ளது. 06130 எண் கொண்ட அந்த ரயில் காலை 9.25 மணிக்கு புறப்பட்டு முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேசமயம் நண்பகல் 12.40க்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு 2.15 மணிக்கு விழுப்புரம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கும், மறுமார்க்கமாக அதிகாலை 3.30க்கு புறப்பட்டு 5 மணிக்கு விழுப்புரம் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது 2025, மே 11, 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மேலும் சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சலூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறப்பு ஏற்பாடுகள்
பொதுவாக ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் உள்ள தீபமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய பௌர்ணமியானது சித்திரை மாதத்தில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் கடுமையாக இருக்கும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
சுமார் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.