ஒடிசாவை சேர்ந்த பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டுகள்..
Tiruppur: திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி ரிங் ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, ஆட்டோவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு காவல் பணியில் பெண் காவலாளி பிரசவம் பார்த்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவலர் கோகிலாவிற்கு பாராட்டுகள் குவிகிறது.

திருப்பூர், ஆகஸ்ட் 16, 2025: திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி ரிங் ரோடு அருகே ஒடிசாவை சேர்ந்த பெண் பாரதிக்கு ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர் கோகிலாவுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்த வருகின்றனர் . பெண் காவலர் கோகிலா என்பவர் திருமுருகன்பூண்டி அருகே ரவுண்டானாவில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த ஆட்டோவில் பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனைக் கண்ட பெண் காவலர் கோகிலா உடன் இருந்த உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் கோகிலா நர்சிங் படித்ததன் காரணமாக அவரை பிரசவம் பார்க்க சொல்லி மற்ற ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஒடிசாவை சேர்ந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்:
ஆட்டோவில் ஒடிசாவை சேர்ந்த பெண் பாரதி என்பவருக்கு பிரசவம் நடந்துள்ளது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் உடனடியாக அந்தப் பெண்ணையும் பிறந்த குழந்தையையும் அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தையின் தொப்புள் கொடி மற்றும் பிற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தக்க சமயத்தில் பெண் காவலர் செய்த இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: திருச்செந்தூர் கடலில் அதிர்ச்சி.. பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு.. நடந்தது என்ன?
பெண் காவலர் கோகிலா 2023 ஆம் ஆண்டு செவிலியர் படிப்பை முடித்துள்ளார். மேலும், இதில் பிரசவம் பார்த்த கோகிலா செவிலியராக பணியாற்றிவிட்டு, விருப்பத்தின் பேரில் காவல் துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றி வருவதை அறிந்த பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இளம் காவலர் கோகிலாவுக்கு தெரிவித்தார்.
மேலும் படிக்க: தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை தொடங்கும் டிக்கெட் முன்பதிவு..
காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே லட்சியம்:
இது தொடர்பாக பேசிய பெண் காவலர் கோகிலா, “ ஆட்டோவில் செல்லும்போது, அந்தப் பெண் வலியால் துடித்த நிலையில் பிரசவமானது. நான் ஏற்கெனவே செவிலியர் பயிற்சி முடித்து பணியாற்றிய அனுபவம் எனக்கு இருந்ததால், அவசரத் தேவை ஏற்பட்ட நிலையில் பிரசவத்தை எவ்வித பதட்டமும் இன்றி செய்ய முடிந்தது” என தெரிவித்தார். மேலும், தனது படிப்பு அவசர நிலையில் இருந்த ஒரு பெண்ணுக்கு உதவியது பெருமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.