“எப்போது வருவீர்கள் முதல்வரே?” 6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்!
School teachers Protest: சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1,583 ஆசிரியர்கள் மீது எழும்பூர் காவல்துறையினர் அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்!
சென்னை, டிசம்பர் 31: அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்கள், ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடந்து முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னையில் ஆசியர்கள் கொட்டும் பனியையும், வெயிலையும் பொருட்படுத்தாது தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கடந்த 26ஆம் தேதி முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சென்னை எழும்பூர் அருகே உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிக்க : ஆங்கில புத்தாண்டுக்கு பொதுமக்கள் ஈஸியா ஊருக்கு செல்லலாம்…TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
6வது நாளாக தொடரும் போராட்டம்:
இந்நிலையில், 6ஆவது நாளாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு:
இதனிடையே, சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1,583 ஆசிரியர்கள் மீது எழும்பூர் காவல்துறையினர் அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆசிரியர்கள் கோரிக்கை என்ன?
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்பட்டது. ஆனால், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று, ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2018ல் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவளித்தார். 2021ல், திமுக ஆட்சிக்கு வந்தால் இந்த முரண்பாடு களையப்படும் என்றும் கூறியிருந்தார். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 311ல் இது குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை எதுவும் நடக்கவில்லை.
இதையும் படிக்க : பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!
ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்துடன் போராட்டம்:
இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் 6 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை, ஸ்டாலின் சந்தித்த புகைப்படத்தை துண்டு பிரசுரமாக தயாரித்து, அதில், ‘கரம் பிடித்து சொன்னீர்களே, கண்ணீர் துடைப்பேன் என்று; காத்திருக்கிறோம், எப்போது வருவீர்கள் எங்கள் முதல்வரே’ என்ற வாசகத்தை அச்சிட்டுள்ளனர். அதனை கையில் ஏந்தியபடி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.