சென்னையில் 6% குறைவாக பதிவான வடகிழக்கு பருவமழை.. எங்கே அதிகம் தெரியுமா? – வெதர்மேன் டேட்டா..
Northeast Monsoon: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் அதிகப்படியான மழையும், ஒரு சில இடங்களில் குறைவான மழையும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார். வடகிழக்கு பருவமழையால் தென் தமிழகம் நல்ல பலனடைந்துள்ளது. ஆனால் குமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பதிவாகியுள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்,

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், டிசம்பர் 21, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. இந்தச் சூழலில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில இடங்களில் அதிகமாகவும், ஒரு சில இடங்களில் குறைவாகவும் பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். அக்டோபர் மாதத்தைப் பொறுத்தவரையில், கடைசி வாரத்தில் வங்கக் கடலில் ‘மோன்தா ’ புயல் உருவானது. இதன் காரணமாக வடகடலோர தமிழக மாவட்டங்களில் கனமழை பதிவானது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் தொடங்கியதும், தென் தமிழகத்தில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழைப் பதிவு இருந்தது.
அதே சமயத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் வெப்பச் சலனம் மற்றும் மேகக் கூட்டங்கள் காரணமாக அவ்வப்போது மிதமானது முதல் கனமழை வரை பதிவானது.
டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்:
நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவானது. இது முதலில் இலங்கையை நோக்கி நகர்ந்து, அங்கு கிட்டத்தட்ட 50 சென்டிமீட்டர் அளவிலான மழைப் பதிவைத் தந்தது. இதன் காரணமாக அங்கு கடுமையான வெள்ளப்பாதிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்தச் சூழலில், புயல் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி நகர்ந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பதிவானது.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரைவில் சிறப்பு முகாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 40 சென்டிமீட்டர் அளவிலான மழை பதிவானது. குறிப்பாக மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த அதிக கனமழை காரணமாக அங்கு உள்ள பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.
மெல்ல மெல்ல இந்த புயல் வடகடலோர தமிழகத்தை நோக்கி நகர்ந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியது. புயல் வலுவிழந்தாலும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலவிய சூழலில், இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தது.
இங்கே தான் மழை அதிகம் – பிரதீப் ஜான்:
North East Monsoon District Wise Scorecard as on 20.12.2025
————————–
A mixed monsoon where in parts of Delta, South TN got one of the best monsoon rains. There too Kumari and Madurai it is below normal. Even in Delta the extreme rains were concentrated in few… pic.twitter.com/oQfQ4Ncqj8— Tamil Nadu Weatherman (@praddy06) December 20, 2025
இப்படியான சூழலில், வடகிழக்கு பருவமழை தற்போதைய நிலவரப்படி எங்கு, எப்படி பதிவாகியுள்ளது, எந்த இடங்களில் கூடுதலாகவும் எந்த இடங்களில் குறைவாகவும் உள்ளது உள்ளிட்ட விவரங்களை தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் அதிகப்படியான மழையும், ஒரு சில இடங்களில் குறைவான மழையும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார். வடகிழக்கு பருவமழையால் தென் தமிழகம் நல்ல பலனடைந்துள்ளது. ஆனால் குமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பதிவாகியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை இருந்தாலும், தென் தமிழகத்தைப் போல மழை கிடைக்கவில்லை. உள் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தில் மழையின் அளவு மிக மிகக் குறைவாக பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
மேலும் படிக்க: நெருங்கும் தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
சென்னையில் 6% குறைவாக பதிவான வடகிழக்கு பருவமழை:
திருவள்ளூர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், 19 சதவீதம் கூடுதல் மழைப் பதிவு கிடைத்துள்ளது. ஆனால் செங்கல்பட்டில் 33 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளது. அதே சமயத்தில், காஞ்சிபுரத்தில் இயல்பை விட 20 சதவீதம் குறைவாகவும், சென்னையில் 6 சதவீதம் இயல்பை விட குறைவாகவும் வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது. இருப்பினும், தென்மேற்கு பருவமழை காரணமாக பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளதால், அடுத்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.