தமிழகத்தில் இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வெயிலுக்கு சின்ன பிரேக்.. வானிலை ரிப்போர்ட் இதோ..
Weather Update: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

கோப்புப் புகைப்படம்
Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடக்கு சத்தீஸ்கர் முதல் குமரிக்கடல் வரை தெலுங்கானா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. மழை ஒருபுறம் இருந்தாலும், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், தமிழகத்தில் வெப்பம் மற்றும் வறண்ட வானிலை தொடரும் நிலையில், சில பகுதிகளில் மட்டுமே மழை வாய்ப்பு உள்ளது.
இதையும் படிக்க: “தமிழகத்தை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (ஏப்.22) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
ஏப்.23 – ஏப்.27ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
ஏப்.22 முதல் ஏப்.25ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
இதையும் படிக்க : பாஜக – ஆர்எஸ்எஸ்-க்கு அதிமுகவினர் அடிபணிந்துள்ளனர்… ராகுல் காந்தி விமர்சனம்!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.