தவெக காணாமல் போகும்.. செல்வபெருந்தகை மறைமுக விமர்சனம்!
விஜயகாந்த் மற்றும் சிரஞ்சீவி ஆகியோரின் கட்சிகளின் வீழ்ச்சியை உதாரணமாகக் காட்டி, விஜயின் கட்சியும் அதே நிலைக்குத் தள்ளப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அதேசமயம், காங்கிரஸின் நீண்டகால வெற்றிக்குக் கட்சியின் வலுவான சித்தாந்தமே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் - செல்வப்பெருந்தகை
கடலூர், ஆகஸ்ட் 26: அரசியலில் விஜயகாந்த் மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான் விஜய்க்கும் ஏற்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தற்போது வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியை குறிவைத்து ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி பேசுவதற்கு என்ன காரணம்?, இதற்கான அவசியம் எழுந்துள்ளதா என்கிற ரீதியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த செல்வ பெருந்தகை, “மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட புதிதாக கட்சி ஆரம்பித்து பத்து சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். முதல் முறையாக அவர் விருத்தாச்சலம் தொகுதியில் தான் எம்எல்ஏ ஆனார்.
நான் அதன் அருகில் இருக்கும் திட்டக்குடியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றேன். முதல் தேர்தலில் பத்து சதவீதத்திற்கும் மேல் வாக்கு பெற்ற கட்சி இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விஜயகாந்த் சித்தாந்தம் சரியாக இருந்தது. யாரையும் திட்டவில்லை, நல்ல கருத்துக்களை தான் சொன்னார். அதேபோல் ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
Also Read: அ.தி.மு.க திராவிட கட்சி அல்ல, அந்தக்காலம் மலையேறி போச்சு: செல்வப்பெருந்தகை
அவர் நடத்திய மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டதாக சொன்னார்கள். கடைசியில் அந்த கட்சியை காங்கிரஸூடன் இணைத்து விட்டார். இப்போது அந்த கட்சி இருக்கிறதா என்றால் கிடையாது. இதுபோன்று பல்வேறு கட்சிகள் உதாரணமாக சொல்லலாம். அப்படிப்பட்ட நிலை தவெகவுக்கும் உண்டாகலாம் என மறைமுகமாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
யானை பலம் கொண்ட கட்சி காங்கிரஸ்
அதே சமயம் காங்கிரஸ் கட்சி நிலைத்து நிற்பதற்கு சித்தாந்தம் வலிமையாக இருப்பதே காரணமாக உள்ளது. யானை பலம் கண்ட கொண்ட ஒரு கட்சியாக காங்கிரஸ் இருக்கும் நிலையில் நாங்கள் யாரையும் தரம் தாழ்ந்து பேச மாட்டோம். ஆர்எஸ்எஸ் பாஜக ஆகியோர் கொள்கை நிலையாக எங்கள் எதிரியாக இருந்தாலும் நாகரிகமாக தான் அவர்களை பற்றி பேசுகிறோம் எனக் கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் உரிமைகளை பாஜக பறித்து வருகிறது. கீழடி அகழ்வாராய்ச்சி உள்ளிட்ட தமிழகத்தின் வரலாற்றை பாஜக மாற்றி எழுத கூறுகிறது. இது தமிழர்களுக்கு எதிரான செயலாகும். அதேபோல் பீஹாரில் பாஜகவுக்கு எதிரான எழுச்சிகளை ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அங்கு பலர் ராகுல் காந்தியை பின்தொடர்கிறார்கள் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Also Read: ஒரே போஸ்டர்.. திமுக கூட்டணியில் குழப்பம்.. துணை முதல்வராகும் செல்வப்பெருந்தகை?
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என விஜய் அழைத்து கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.