ஆந்திராவில் கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னைக்கு என்ன நிலை? பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
Montha Cyclone: பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பதிவில், வங்கக் கடலில் உருவாகக்கூடிய புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் என குறிப்பிட்டுள்ளார். வடதமிழகத்திற்கு அருகே வராமல், ஆந்திராவை நோக்கி இந்த புயல் நகரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை இல்லாமல், மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும்.
வானிலை நிலவரம், அக்டோபர் 24, 2025: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அக்டோபர் 25, 2025 அன்று தென் பழக்கம் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 26, 2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27, 2025 அன்று மதியம் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இன்னும் ஓரிரு நாட்களில் புயல் உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த புயலின் பாதை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு செய்துள்ளார். அதாவது, வடதமிழகத்திற்கு அருகே இந்த புயல் நகர்ந்துசென்றால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: சிட்டிக்கு நடுவே இப்படி ஒரு இடமா? இயற்கை எழில் கொஞ்சும் தொல்காப்பிய பூங்கா.. சிறப்பம்சம், நுழைவு கட்டணம் விவரம் இதோ..
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை:
வங்கக் கடலில் உருவாகக்கூடிய புயலின் காரணமாக அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் நல்ல மழை பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அக்டோபர் 25, 2025 அன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அக்டோபர் 26, 2025 அன்று விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக் கடலில் புயல் உருவாகும் நாளான அக்டோபர் 27, 2025 அன்று திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: களத்தில் 22,000 பேர்.. பருவமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகராட்சி..
ஆந்திராவில் கரையை கடக்கும் புயல்:
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பதிவில், வங்கக் கடலில் உருவாகக்கூடிய புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த புயலுக்கு “மோன்தா ” என பெயர் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். வடதமிழகத்திற்கு அருகே வராமல், ஆந்திராவை நோக்கி இந்த புயல் நகரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை இல்லாமல், மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும். ஆனால் இந்த புயல் வடதமிழகக் கடலோர பகுதிகளுக்கு அருகே வந்து சென்றால், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகக்கூடும்.
இந்த புயலின் பாதை குறித்து தெளிவான தகவல் அக்டோபர் 25 அல்லது 26, 2025 அன்று தெரிந்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் என்பதால், தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு இருக்காது. புயலைத் தொடர்ந்து நவம்பர் முதல் வாரத்தில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.