Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிளஸ் 2 துணைத் தேர்வு: மாணவர்கள் மே 14 – 29 வரை பள்ளியில் விண்ணப்பிக்கலாம்…

TN Plus 2 Supplementary Exams 2025:தமிழ்நாட்டில் பிளஸ் 2 கூடுதல் தேர்வு 2025 ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை நடைபெறும். பள்ளி மாணவர்கள் மே 14 முதல் 29 வரை பள்ளியில் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். தாமத விண்ணப்பதாரர்கள் 2025 மே 30, 31 ஆகிய தேதிகளில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

பிளஸ் 2 துணைத் தேர்வு: மாணவர்கள் மே 14 – 29 வரை பள்ளியில் விண்ணப்பிக்கலாம்…
பிளஸ் 2 துணைத் தேர்வு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 May 2025 10:01 AM

தமிழ்நாடு மே 14: பிளஸ் 2 துணைத் தேர்வு (Plus 2 Supplementary Examination) 2025 ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை (School Education Department) அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் 2025 மே 14 முதல் 29 வரை தங்களது பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும். தனித் தேர்வர்கள் கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். தத்கால் விண்ணப்பதாரர்கள் 2025 மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ₹1,000 கூடுதலாக கட்டணமாக செலுத்த வேண்டும். அனைத்து தேர்வுகளும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும். விண்ணப்ப விவரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் தொடர்பான தகவல்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய நேரம் மற்றும் முறை

பொதுத் தேர்வில் தோல்வியடைந்த பள்ளி மாணவர்கள், தங்களது பள்ளி மூலமாகவே இன்று முதல் 2025 மே 14 முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். தனித் தேர்வர்கள், கல்வி மாவட்டங்களுக்கு அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தவறுபட்டவர்களுக்கு 2025 மே 30, 31 தேதிகளில் தத்கால் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். இந்நாள்களில் விண்ணப்பிக்க ரூ.1,000 தத்கால் கட்டணமாக கூடுதலாக செலுத்த வேண்டும். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இக்கட்டணம் விதிக்கப்படாது.

தேர்வு அட்டவணை விவரம்

ஜூன் 25: மொழிப்பாடங்கள்

ஜூன் 26: ஆங்கிலப் பாடம்

ஜூன் 28 முதல் ஜூலை 2: மற்ற பாடங்கள்
தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்.

விண்ணப்பத் தகவல் மற்றும் ஹால் டிக்கெட்

விரிவான தேர்வு அட்டவணை, சேவை மையங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் ஆகியவை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பித்த பிறகு வழங்கப்படும் ஒப்புதல் சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

முதல்வரின் செய்தி

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் தங்களை நம்புமாறு உறுதி அளிக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ‘‘தோல்வியால் துவண்டு விடாமல், துணைத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிடுங்கள். உங்களது உயர்கல்வி பயணத்திற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்,’’ என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, தேர்ச்சி பெற்ற 7.47 லட்சம் மாணவர்களின் பெற்றோருக்கு, முதல்வரின் குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. அதில், “பிள்ளைகளை கட்டாயம் உயர்கல்வியில் சேர்க்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடி தேர்வு

2025 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இவர்களில் சிலர் தோல்வியடைந்த நிலையில், அவர்களுக்கான உடனடி வாய்ப்பாக இந்த துணைத் தேர்வு நடைபெறுகிறது. மாணவர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, உயர்கல்விக்கான தகுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.