அதிமுக ஆட்சியில் கோவில் நிதியிலிருந்து கல்வி நிலையங்களுக்கு செலவிட்டதற்கான ஆதாரம் உள்ளது – அமைச்சர் சேகர் பாபு..

Minister Sekar Babu: திமுக ஆட்சியில் கோயில் நிதியில் கல்வி நிலையங்களுக்கு செலவிட்டது சதி என்றால், அதிமுக ஆட்சி காலத்தில் செலவிட்டதும் சதியா? என எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கல்வி குறித்து விமர்சனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி கல் நெஞ்சக்காரர் என தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் கோவில் நிதியிலிருந்து கல்வி நிலையங்களுக்கு செலவிட்டதற்கான ஆதாரம் உள்ளது - அமைச்சர் சேகர் பாபு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

10 Jul 2025 10:54 AM

சென்னை, ஜூலை 10. 2025: திமுக ஆட்சியில் கோயில் நிதியில் கல்வி நிலையங்களுக்கு செலவிட்டது சதி என்றால், அதிமுக ஆட்சி காலத்தில் செலவிட்டதும் சதியா? என எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் கோவில் நிதியிலிருந்து கல்வி நிலையங்களுக்கு செலவிட்டதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பில் அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் ஆண்டிற்கு 3.5 கோடி பக்தர்கள் பொதுமக்கள் கோயில்களில் நடைபெறும் அன்னதானங்கள் மூலமாக பயனடைகின்றனர். இதற்காக 120 கோடி ரூபாய் ஆண்டிற்கு செலவிடப்படுகிறது.

22,000 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரூபாய் 132 கோடி செலவில், 25 பள்ளிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, ஒன்பது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 22 ஆயிரத்து 450 மாணவர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயில்கின்றனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள்தான் அதிகம் பயன் பெறுகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டபோது வழிகாட்டு குழுவின் பரிந்துரையின்படி கல்வி நிலையங்கள் உருவாக்கலாம் என அறிக்கை கொடுக்கப்பட்டது. சோழர் காலத்தில் கூட மிகப்பெரிய கல்விச்சாலைகள் இருந்ததாகவும் அதில் 11 பாடப் பிரிவுகள் இடம் பெற்றுள்ளதாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிலையங்களையும் மருத்துவ நிலையங்களையும் நமது தமிழகத்தில் மன்னர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

Also Read: முதலமைச்சர் ஸ்டாலினின் திருவாரூர் பயணம்.. இரண்டாம் நாள் திட்டம் என்ன?

“இந்து சமய அறநிலையத் துறையின் சட்டம் 36 இன் படியும், 66 (1) ல் சொல்லப்பட்டுள்ள படியும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தொடங்கலாம்.” என சொல்லப்பட்டுள்ளது. ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக, அவதூறு கருத்துக்களை சொல்ல முடியவில்லை என்பதற்காக, சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பல பொன்னான வார்த்தைகளை சொல்லியிருக்கிறார். அவரை பார்த்து நான் சொல்லிக்கொள்ள விருபுகிறேன்.

அதிமுக தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை:

எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது அவர் அருகில் அம்மன் அர்ஜுனன் என்ற சட்டமன்ற உறுப்பினர் இருந்தார். அவர் கடந்த ஆண்டு மருதமலை திருக்கோயில் சார்பாக ஐடிஐ கல்லூரி வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இந்த ஆண்டு மானிய கோரிக்கையில் மருதமலை கோவிலுக்கு சொந்தமாக ஐடிஐ கல்லூரி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டோம். சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கல்லூரி வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கிறார். அமுல் கந்தசாமி, பெரிய புள்ளான் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் கல்வி நிலையம் வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: பாமக தலைமைப் பதவிப் போர்: தேர்தல் ஆணையத்தில் முறையீடு..!

அதிமுக செய்ததும் சதி செயலா?

கல்வி குறித்து விமர்சனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி கல் நெஞ்சக்காரர். சங்கிகளின் சொல் பேச்சைக் கேட்டு, பாஜகவின் ஊது குழலாக இருந்து இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். கோவில் காசை எடுத்து கல்லூரி கட்டியது சதிசெயல் என எடப்பாடி பழனிசாமி சொன்னது, அதிமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது அப்போது அவர்கள் செய்தது சதி செயலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சிக்காலத்திலும் கோயில்களின் நிதியில் இருந்து தான் கல்வி நிலையங்களுக்கு செலவிடப்பட்டது என அவரது விமர்சனத்தை மறுத்தார் சேகர் பாபு. திமுகவிற்கு கூடுகின்ற கூட்டம் கொள்கை கூட்டம். எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பிரச்சாரம் கூடி கலைகின்ற கூட்டம் என குறிப்பிட்டுள்ளார்.