தமிழக சட்டப்பேரவை ஜன.20-இல் கூடுகிறது…சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு!
Tamil Nadu Legislative Assembly will meet on January 20th: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 2026- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி கூட இருப்பதாகவும், ஆளுநர் உரை வாசித்து கூட்டத்தை தொடங்கி வைப்பார் என்றும் மு. அப்பாவு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்
இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவையை ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டுவது விதி ஆகும். அதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 174 (1) கீழ் 2026- ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடரை நடத்துவதற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தக் கூட்டமானது தமிழ்நாடு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்றத்தில் ஜனவரி 20-ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதன்படி, இந்திய அரசியலமைப்பு சட்டம் 176 (1) கீழ் அன்றைய நாளில் காலை 9:30 மணிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள் தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என். ரவி வாசிப்பார்.
இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடராக…
ஆளுநர் உரையை வாசித்த பின்னர், அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அவர்கள் அளிக்கும் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடராக தொடர்ந்து நடக்குமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும். அப்போது, கடந்த 2024 மற்றும் 2025 சட்டப் பேரவை கூட்டத் தொடரின் போது, ஆளுநர் ஆர். என். ரவி பாதியில் வெளியேறியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தின் மரபுகளை மாற்றாமல், தமிழக சட்டப் பேரவையின் மாண்புகளை ஆளுநர் ஆர். என். ரவி காப்பாற்றுவார் என நம்புகிறேன் என்று சபாநாயகர் மு. அப்பாவு தெரிவித்தார்.
மேலும் படிக்க: எந்த பேச்சுவார்த்தையும் கூடாது.. அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பில் எச்சரிக்கை..
கூட்டத்தொடரில் பாதியில் வெளியேறிய ஆளுநர்
கடந்த 2025 ஜனவரி மற்றும் 2024 பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே இசைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆளுநர் உரையில் திராவிட மாடல் என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கும் ஆளுநர் மறுத்துவிட்டார்.
முதல்வரின் குழந்தை தனமான செயல்
இதனால், அவர் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பாதியிலேயே அவசர அவசரமாக வெளியேறினார். இது அரசியலமைப்புக்கு ஏற்பட்ட அவமரியாதை என்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்த செயல் குழந்தை தனமானது என்று விமர்சித்திருந்தார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் கோரிக்கையை முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் மு. அப்பாவு நிராகரித்ததால் வருத்தத்துடன் ஆளுநர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: பாமகவில் அடுத்த அதிரடி.. ஜி.கே மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி அறிக்கை..