நெருங்கும் தீபாவளி…. ரூ.10 லட்சம் அபராதம், 6 மாதம் சிறை…. இந்த 7 விதிமுறைகளை பின்பற்றாத உணவு நிறுவனங்களுக்கு தண்டனை
Diwali Safety Alert : தீபாவளி நெருங்கும் நிலையில் மக்கள் கடைகளில் பட்டாசு மற்றும் பலகாரங்கள் வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடைகளில் பலகாரங்கள் தயாரிக்க உணவு பாதுகாப்பு துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி (Diwali) கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இன்னும் சில தினங்களில் தீபாவளி வந்து விடும். மக்கள் அதற்காக புத்தாடை வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது என கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான கடை வீதிகள் கூட்ட நெரிசலாக காணப்படுகின்றன. கடைசி நேரத்தில் சென்றால் கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மக்கள் தற்போதே பொருட்களை வாங்கி வருகின்றனர். தீபாவளி என்றாலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிப்பது என்பது ஒரு சம்பிரதாயம். கூடுதலாக கறி சமைத்து சாப்பிடுவதும் விதவிதான பலகாரங்கள் சாப்பிடுவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. வீடுகளில் பலகாரங்கள் செய்ய முடியாதவர்கள் கடைகளில் சென்று பலகாரங்கள் வாங்குவர். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு கடைகளில் உணவுப் பொருட்கள் தயாரிக்க உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : இருமல் மருந்து மரண வழக்கு – தமிழ்நாடு காரணமா? குற்றம் சுமத்தும் மத்திய அரசு?
- உணவு தயாரிப்பவர்கள் உணவு பொருட்களை கடைகளுக்கு விற்கும் முன் அதற்கான பாதுகாப்பு உரிமம், காலாவதியாகும் தேதி சான்றிதழ் ஆகியவை இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- உரிமம், சான்றிதழ் இல்லாவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம், 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
- உணவு பொருட்களுக்கு பாக்கெட்டுகளில் விற்கப்படும் தரமான எண்ணெய் மற்றும் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- உணவை கையாள்வோர் அனைவரும் மருத்துவ தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும் .
- உணவு தயாரிக்கும் இடங்களில் புகையிலை பயன்படுத்துவது, உமிழ்வது போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். இது கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்.
- உணவு தயாரிப்பின்போது பணியாளர்கள் அனைவரும் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.
- உணவு பாதுகாப்பு குறித்து விதிமீறல் இருந்தால் 9444042322 அல்லது TNFSD Consumer App மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகார் உண்மை என தெரிந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிக்க : சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தஷ்வந்த் விடுதலை.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!




கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகளால் ஏராளமான உடல் நலக்குறைவு ஏற்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில் உணவு பாதுகாப்பு துறை இத்தகைய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்குவார்கள் என்பதால் அவர்களுக்காக இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.