மகளிர் உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான முக்கிய அறிவிப்பு..
Magalir Urimai Thogai Scheme: வருமானவரி செலுத்தும் குடும்பங்களைத் தவிர்த்து, மற்ற குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் வரவிருக்கும் டிசம்பர் மாதம் முதல் புதிய பயனாளிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பு புகைப்படம்
சென்னை, அக்டோபர் 25, 2025: தமிழகத்தில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளனர். அதாவது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மூலம் மாதத்திற்கு அவர்கள் வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், பலருக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை.
குறிப்பாக பல்வேறு காரணங்களால் இது நிராகரிக்கப்பட்டதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், மகளிர் உரிமைத்தொகை தகுதியான அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும் என அரசு தரப்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டது. பெண்களின் வாக்குகள் சிதறக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, மகளிர் உரிமைத்தொகை கிடைக்க தகுதியான பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிட்டிக்கு நடுவே இப்படி ஒரு இடமா? இயற்கை எழில் கொஞ்சும் தொல்காப்பிய பூங்கா.. சிறப்பம்சம், நுழைவு கட்டணம் விவரம் இதோ..
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம்:
தமிழ்நாடு முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் அக்டோபர் 30, 2025 வரை நடைபெறும். இந்த திட்டம் என்பது பல்வேறு அரசுத்துறை சேவைகள் முகாம்கள் மூலமாக மக்களுக்கு வழங்கப்படும். இதில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இதில் பல்வேறு சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆந்திராவில் கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னைக்கு என்ன நிலை? பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மூலம் தற்போது வரை 28 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் தகுதியானவர்களுக்கு வரவிருக்கும் 2025 டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
வருமான வரி செலுத்துபவர்கள் தவிர அனைவருக்கும் உரிமை தொகை:
ஆனால், பெண்கள் பலரும் தங்களது விண்ணப்பங்களை காரணமின்றி நிராகரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து, காரணமின்றி விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று வருவாய்த் துறையினருக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வருமானவரி செலுத்தும் குடும்பங்களைத் தவிர்த்து, மற்ற குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் வரவிருக்கும் டிசம்பர் மாதம் முதல் புதிய பயனாளிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.