நெருங்கும் தீபாவளி பண்டிகை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முழு விவரம்..
Special Train For Diwali: இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் தமிழக முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் முதல் போத்தனூர்வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் 2025 அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, அக்டோபர் 16, 2025: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இதற்காக மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருப்பார்கள். வழக்கமாக செல்லக்கூடிய ரயில்களில் பண்டிகை காலங்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமான விஷயமாகும். இதற்காக எப்போதும் தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்.
தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்:
அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக தெற்கு ரயில்வே தரப்பில் சிறப்பு ரயில்கள் தமிழக முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் முதல் போத்தனூர்வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் 2025 அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 06049 இரவு 11.55 மணியளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.
மேலும் படிக்க: இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06050 போத்தனூரில் இருந்து பிற்பகல் 2.00 மணியளவில் புறப்பட்டு அன்று இரவே 11.10 மணியளவில் சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் 2025 அக்டோபர் 18 ஆம் தேதி மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரல், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை 2025 அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணியளவில் சென்னை வந்தடையும்.
தாம்பரம் முதல் கன்னியகுமரி வரை இயக்கப்படும் ரயில்:
மேலும் சென்னை தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 06133, 2025 அக்டோபர் 16 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரவு 11.30 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.25 மணியளவில் கன்னியாகுமரியை சென்றடையும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06134, கன்னியாகுமரி முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2025 அக்டோபர் 17 ஆம் தேதி பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணியளவில் செங்கல்பட்டை வந்தடையும்.
மேலும் படிக்க: மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா.. காரணம் இதுவா?
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு முதல் திருநெல்வேலி வரை சிறப்பு ரயில்:
அடுத்ததாக திருநெல்வேலி முதல் செங்கல்பட்டு வரையிலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 06156, அக்டோபர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும். இதேபோன்ற மற்றொரு வண்டி எண் 06155, செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3.00 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
இந்த இரண்டு ரயில்களும் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.