‘அதீத பணி நெருக்கடி’.. தமிழ்நாட்டில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு!!

தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு இன்னும் 5 மாத காலமே அவகாசம் உள்ளது. இந்த சூழ்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

‘அதீத பணி நெருக்கடி’.. தமிழ்நாட்டில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு!!

எஸ்ஐஆர் பணிகள்

Updated On: 

17 Nov 2025 15:14 PM

 IST

சென்னை, நவம்பர் 17: தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (Special intensive revision) புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கம் முடிவு செய்து அறிவித்துள்ளன. கடும் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முடிக்க ஒரு மாதம் மட்டுமே தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த பணிகள் கடந்த நவ.4ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு, வீடாக சென்று விண்ணப்பங்ககளை வழங்கி வருகிறார்கள். இன்னும் 14 நாட்களே மீதமுள்ள நிலையில், பிஎல்ஓக்கள் SIR படிவங்களை இரவு, பகலாக வார விடுமுறை உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாது விநியோகித்து வருகின்றனர்.

இதையும் படிக்க : “2026 தேர்தலில் திமுக-தவெக இடையே மட்டும் தான் போட்டி”.. அடித்துச் சொல்கிறார் டிடிவி தினகரன்

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு:

இதுதொடர்பாக வருவாய்த்துறை சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், SIR பணிகள் உரிய திட்டமிடல் இல்லாமலும், சரியான பயிற்சி வழங்காமலும், கூடுதல் பணியாளர்களை நியமிக்காமலும், உரிய நிதி ஒதுக்கீடு செய்யாமலும் அவசர கதியில் மேற்கொள்ள நிர்பந்தம் செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், அனைத்து நிலை வருவாய்த்துறை ஊழியர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடி மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கலைந்திட வலியுறுத்தி நாளை முதல் SIR புறக்கணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புறக்கணிப்பு போராட்டத்தில், கிராம உதவியாளர்கள். கிராம நிர்வாக அலுவலர்கள், நிலைய அலுவலர், அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் முழுமையாக ஈடுபடுவர் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் பிஎல்ஓ தற்கொலை:

ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக (BLO) பணி மேற்கொண்டு வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் முகேஷ் (45) இன்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். SIR பணியால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!

கேரளாவில் பிஎல்ஓ தற்கொலை:

கேரள மாநிலம் கண்ணூர் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டு வந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) அனீஷ் ஜார்ஜ் பணிச்சுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அங்குள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் உதவியாளாரக பணியாற்றி வந்துள்ளார்.

தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் பிஎல்ஓ பணியில் நியமிக்க வேண்டாம் என்று இவர் ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் அதனை பொருட்படுத்தாது அவர் பிஎல்ஓ பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

கேரளாவில் SIR பணிகள் புறக்கணிப்பு:

இதையொட்டி, கேரளாவில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர். தங்களுக்கு தேர்தல் ஆணையம் அதிக பணிச்சுமையை தந்து மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றும், இதன் காரணமாகத்தான் பிஎல்ஓ அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்டார் எனவும் போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.

துல்கர் சல்மானின் காந்தா படம் எப்படி இருக்கு?
பிளாஸ்டிக் பாத்திரங்களில் நிறைந்திருக்கும் அபாயம்
நியூயார்க்கை சுற்றி வரும் அனிருத் - காவ்யா மாறன்
ரஷ்யா கல்லூரியில் படிக்க விரும்புகிறீர்களா? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்!