“பாஜகவின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன்”.. அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!
பாஜகவின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன் என்றும், தவெகவை பாஜக பக்கம் அழைத்து வருவதற்காக அவர் அக்கட்சியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார். அதோடு, திமுகவுக்கு வரும்படி, அமைச்சர் சேகர்பாபு செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை என்றும் கூறினார்.

அமைச்சர் ரகுபதி
சென்னை, நவம்பர் 28: பாஜகவின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன் என்றும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் சேர ஒரு குறிப்பிட்ட பணிக்காக அனுப்பப்பட்டவர் என்றும் அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் செயல்பட்டு வந்த செங்கோட்டையன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பு குறித்து வெளிப்படையாக குரல் எழுப்பி வந்தார். இதைத்தொடர்ந்து, அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், தேவர்ஜெயந்தியன்று டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சந்தித்தார். இதைத்தொடர்ந்து, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அவர், தனது நீக்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கூறி வந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வகையில், அவர் தவெகவில் இணைந்துள்ளார்.
இதையும் படிக்க: 29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..
தவெகவில் முக்கியப் பொறுப்பு:
அந்தவகையில், நேற்றைய தினம் (நவ.27) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் தனது ஆதராவாளர்களுடன் அக்கட்சியல் இணைந்தார். அவருக்கு விஜய் பூங்கொத்து கொடுத்து, கட்சி துண்டை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். அதோடு, தவெக உறுப்பினர் அட்டையையும் வழங்கினார். அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரது ஆதரவாளரான முன்னாள் அதிமுக எம்.பி சத்தியபாமாவும் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பாஜகவின் ஸ்லீப்பர் செல்:
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, பாஜகவின் ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன் என்றும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் சேர ஒரு குறிப்பிட்ட பணிக்காக அனுப்பப்பட்டவர் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் அமித் ஷா அழைத்தால் ஓடுவார். இன்றும் அமித் ஷாவின் ரிமோட் கன்ட்ரோலில் ஓடிக்கொண்டிருப்பவர் தான் என்றும் சாடியுள்ளார்.
விரைவில் நிரூபிப்போம்:
மேலும், தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட ஸ்லீப்பர் செல்தான் எனவும் அந்த அசைன்மென்ட்டில் தான், அவர் அனுப்பப்பட்டிருப்பார் என்பது எங்களின் கருத்து. அது உண்மையா என்பதை விரைவில் நிரூபிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, செங்கோட்டையனை பாஜக ஏமாற்றியதால், தமிழக வெற்றிக் கழகத்தில் சென்று சேர்ந்தாரா?” என்று எழுப்பிய கேள்விக்கு, பாஜக அவரை ஏமாற்றியிருந்தால் அவர் தவெகவுக்கு சென்றிருக்கமாட்டார் என்று பதிலளித்தார்.
இதையும் படிக்க : “செங்கோட்டையன் பின்னால் பாஜக இல்லை”.. நயினார் நாகேந்திரன் பளீர்!
திமுகவிற்கு அழைத்தும் வரவில்லை:
அதனைத் தொடர்ந்து, அவரிடம் அமைச்சர் சேகர்பாபு, செங்கோட்டையனை திமுகவில் சேர அழைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஒரு கட்சியை விட்டு வெளியேறியவரை அழைப்பது இயல்பானதே. நண்பர்கள் என்ற முறையில் அழைத்திருக்கலாம். ஆனால் அவர் வரவில்லை, ஏனெனில் அவர் ஸ்லீப்பர் செல் என்றார்.