“ரோடுஷோ வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற முடியாதவை”.. வழக்கு தொடர்ந்த தவெக
TVK filed a lawsuit against Roadshow guidelines: இந்த நெறிமுறைகளின் படி, பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 10 முதல் 30 நாட்களுக்கு முன்பே ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அல்லது அந்தப் பகுதி காவல்துறை ஆணையாளர் அல்லது கண்காணிப்பாளர் இதற்கு அனுமதி வழங்குவார்கள்.

தவெக வழக்கு
சென்னை, ஜனவரி 31: ரோட்ஷோ மற்றும் பொதுக்கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு, ஜனவரி 5ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. இந்த நெறிமுறைகளின் படி, பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்த வேண்டுமென்றால், குறைந்தபடசம் 10 முதல் 30 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
தவெக தாக்கல் செய்த மனு:
தவெக சார்பில் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், இது தொடர்பான மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். நிர்மல் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே முன்னுரை அளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது பதிவு செய்யப்பட்ட ஆனால், அங்கீகரிக்கப்படாத புதிய கட்சிகளின் பேச்சுரிமை மற்றும் சமத்துவ உரிமையை பாதிப்பதாக தெரிவித்திருக்கிறார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக த.வெ.க அளித்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடவும்:
இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அரசின் பொறுப்புகள், கட்சிகள் மீது திணிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்துவிட்டு, அனைத்து தரப்பினரின் கருத்துகளை பரிசீலித்து, புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
முன்னதாக, கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கூட்டங்களை முறைப்படுத்த நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஜனவரி 5ஆம் தேதி அன்று தமிழக அரசின் 47 பக்கங்களை கொண்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்த நெறிமுறைகளின் படி, பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 10 முதல் 30 நாட்களுக்கு முன்பே ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அல்லது அந்தப் பகுதி காவல்துறை ஆணையாளர் அல்லது கண்காணிப்பாளர் இதற்கு அனுமதி வழங்குவார்கள்.
எத்தனை பேர் என்பதை குறிப்பிட வேண்டும்:
ஓரிடத்தில் எத்தனை பேர் கூடலாம் என்பதை பொதுப்பணித்துறை அதிகாரி குறிப்பிட வேண்டும். அந்த எண்ணிக்கைக்கு மேல் ஆட்கள் சேரக்கூடாது. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு போதுமான அளவு நடமாடும் கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை கட்சியினர் செய்திருக்க வேண்டும். ஆம்புல்னஸ் வசதி, முதலுதவி சிகிச்சை முகாம் மற்றும் அவசர கால வெளியேறும் வழிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். பொது சொத்துக்களுக்கோ, அல்லது தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பை கட்சியினர் வழங்க வேண்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
இதையும் படிக்க : திமுக கூட்டணியில் தேமுதிக? சஸ்பென்ஸ் வைத்த கனிமொழி.. எகிறும் எதிர்பார்ப்பு!
தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்:
சாலைகளில் ஊர்வலம் செல்லும்போது, பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடாது. போக்குவரத்தை சீர் செய்ய தேவையான தன்னார்வலர்களை கட்சியினர் நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.