+2 மாணவி கொலை: “பெயரை பச்சை குத்தியுள்ளேன்”.. கைதான இளைஞர் பகீர் வாக்குமூலம்!!
+2 Student murder: பள்ளி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதான இளைஞர் முனிராஜ் தான் கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவியை ஒருதலையாக தீவிரமாக காதலித்து வந்ததாகவும், ஆனால், முனிராஜின் காதலை ஷாலினி ஏற்க மறுத்ததால் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

கைதான முனிராஜ், பலியான மாணவி.
ராமநாதபுரம், நவம்பர் 21: ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் (நவ.19) பள்ளிச் சென்ற 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை பின்னணியில் முனிராஜ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். மாணவி காதலை ஏற்க மறுத்ததால் கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, இந்த விவகாரத்திற்கு தமிழகத்தில் பெரும்பலான அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பள்ளி செல்லும் மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழ்நாட்டில் உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், தமிழகம் முழுவதும் அலுவலகம், கல்லூரி, பள்ளி செல்லும் பெண்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில், நடந்த இந்த கொலை சம்பவம் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : +2 மாணவி கொலை: பள்ளி மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை.. தலைவர்கள் கடும் கண்டனம்!!
பள்ளி மாணவி கத்தியால் குத்திக்கொலை:
ராமேஸ்வரம் அடுத்த சேரங்காட்டை பகுதியை சேர்ந்தவர் மாணவி ஷாலினி. இவர் அப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் மாணவி கடந்த (நவ.19)அன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றபோது, முனிராஜ் என்ற இளைஞர் அம்மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, மாணவியிடம் தனது காதலை ஏற்க வற்புறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே, முனிராஜ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக மாணவியை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவி துடிதுடித்து உயிரிழந்தார்.
மாணவியின் உறவினர்கள் ஆத்திரம்:
இந்த விவகாரத்தில் இளைஞர் முனிராஜை உடனடியாக போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, மாணவி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முனிராஜை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூச்சலிட்டனர். தொடர்ந்து, அவர்கள் காவல் நிலையத்தின் கதவை உடைத்து உள்ளே நுழையவும் முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இதனிடையே, மாணவியின் குடும்பத்தினரை சமாதானப்படுத்திய காவல் துறை அதிகாரிகள் அவருக்கு சட்டரீதியாக கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளித்துள்ளனர்.
முனிராஜின் பரபரப்பு வாக்குமூலம்:
அந்தவகையில், கைதுசெய்யப்பட்ட முனிராஜிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில், கடந்த சில மாதங்களாக தான் மாணவி ஷாலினியை அவர் பள்ளி செல்லும் போதும், முடித்து வீடு திரும்பும் போதும் பின்தொடர்ந்து சென்றதாக கூறியுள்ளார். அதோடு, சில நாட்களுக்கு முன் தன் காதலை மாணவியிடம் வெளிப்படுத்தியாதகவும், ஆனால் அவர் தனது காதலை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனினும், ஒருதலையாக மாணவி ஷாலினியை காதலித்து வந்ததால், விடாமல் அவரை பின்தொடர்ந்து சென்றதாகவும் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாகவும் கூறியுள்ளார்.
மாணவி பெயரை பச்சை குத்திய முனிராஜ்:
மாணவி மீது கொண்ட அதீத காதலால் அவரது பெயரை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளதாகவும், தெரிவித்துள்ளார். ஆனால், ஷாலினியோ தான் படிக்க வேண்டும், உயர்கல்விக்கு செல்ல வேண்டும். தன்னை பின்தொடர வேண்டாம், இனியும் தொடர்ந்தால் பெற்றோரிடம் கூறி போலீஸ் புகார் அளிப்போம் என்று எச்சரித்தாகவும் கூறியுள்ளார். இதனால், தான் ஆத்திரமடைந்தாகவும், பின் மாணவியை கொலை செய்ய திட்டமிட்டு கத்தியால் குத்தி கொலை செய்ததாக முனிராஜ் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : கோவைக்கும், மதுரைக்கும் “NO METRO”.. தமிழ்நாட்டை பழிவாங்குவதா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!
இதனிடையே, கைதான முனிராஜ் தற்போது ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரை டிச.3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.