கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்… ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை பேட்டி
Congress Alliance Talks: திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி குறித்த சலசலப்பு நிலவி வரும் நிலையில் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். தனையடுத்து கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என ராகுல் காந்தி அறிவுறுத்தியதாக செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

ராகுல் காந்தி - செல்வப்பெருந்தகை
கடந்த சில நாட்களாக திமுக – காங்கிரஸ் இடையில் கூட்டணி குறித்து சலசலப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாணிக்கம் தாகூர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியில் பங்கு என பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிட்ட பராசக்தி (Parasakthi) படத்தில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வசனங்களும் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தின. மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
‘கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்’
இதற்கிடையில் தான் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள், டெல்லியில் ஜனவரி 17, 2026 அன்று ராகுல் காந்தியை சந்தித்து தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என ராகுல் காந்தி தெளிவாக தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க : பாஜக கூட்டணியில் இணைகிறதா அமமுக?டிடிவி தினகரன் கூறிய பதில்!
மேலும் பேசிய அவர், கூட்டணி விவகாரத்தில் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடுவதும், தனிப்பட்ட அறிக்கைகள் வெளியிடுவதும் தனக்கு வேதனை அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இத்தகைய செயல்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், கட்சியின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை பாதிக்கும் என்றும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
மேலும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அகில இந்திய தலைமை மட்டுமே எடுக்கும். அந்த முடிவுகளை தமிழ்நாடு காங்கிரஸ் முழுமையாக பின்பற்றும் கூட்டணி குறித்து தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தாமல், கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருக்க வேண்டும் என்பதே தலைமையின் நிலைப்பாடு.
இதையும் படிக்க : மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை…ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம்…அதிமுகவின் அசத்தல் தேர்தல் வாக்குறுதி!
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி குறித்தும் பல்வேறு ஊகங்களும் விவாதங்களும் எழுந்து வரும் நிலையில், கட்சிக்குள் ஒற்றுமையும் கட்டுப்பாடும் அவசியம் என ராகுல் காந்தி வலியுறுத்தினார் என அவர் பேசினார். கூட்டணணி குறித்து இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து எந்த அறிவிப்பையும் செல்வப்பெருந்தகை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.