முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.. திருவண்ணாமலை சம்பவம் குறித்து தலைவர்கள் கண்டனம்..

Tiruvannamalai Crime: திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திரா பெண்ணை, காவலர்கள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள பலரும் இதற்கு கடுமையான கண்டனங்கள் பதிவு செய்து வருகின்றனர்,

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.. திருவண்ணாமலை சம்பவம் குறித்து தலைவர்கள் கண்டனம்..

கோப்பு புகைப்படம்

Published: 

01 Oct 2025 17:34 PM

 IST

திருவண்ணாமலை, அக்டோபர் 1, 2025: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திராவில் இருந்து சுவாமி தரிசனத்திற்காக வருகை தந்த தாய் மற்றும் மகள் இருவரையும் காவல்துறையினர் வாழைத்தார் ஏற்றி வந்த மினி வேனில் இருந்து இறக்கிவிட்டு, தாயை பள்ளத்தில் தள்ளிவிட்டு மகளை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

காவலர்களே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்:

ஆந்திராவில் இருந்து சுவாமி தரிசனத்திற்காக தாய் மற்றும் மகள் வாழைத்தார் ஏற்றி வந்த மினிவேனில் லிப்ட் கேட்டு வந்துள்ளனர். திருவண்ணாமலை அருகே நள்ளிரவு நேரத்தில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் தாய் மற்றும் மகளை கீழே இறக்கிவிட்டு, “நாங்களே கோவிலுக்கு அழைத்துச் செல்வோம்” என்று கூறி தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

மேலும் படிக்க: உதவுவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்.. திருவண்ணாமலையில் அதிர்ச்சி..

ஆனால் கோவிலுக்கு செல்லாமல் விழுப்புரம் நோக்கிச் செல்லும் சாலையில் சென்று தாயை அருகிலிருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டு, மகளை புதர்க்குள் இழுத்துச் சென்று இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

காவலர்கள் இருவர் கைது:

அதிகாலை நேரத்தில் உயிருடன் தப்பித்து வந்த அந்தப் பெண் சாலையோரம் உதவி கேட்டார். அங்கிருந்த மக்கள் அவரையும் தாயையும் செங்கல் சூளைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைத் தகவலின்படி, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ஐஏஎஸ் படிக்க வைக்க உதவி.. பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த பெண்!

அச்சத்தில் மக்கள் – நயினார் நாகேந்திரன்:


பாஜக மாநில தலைவர் நயினார் நாகேத்திரன் தனது எக்ஸ் கணக்கில், “திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எங்களை கவலையில் ஆழ்த்துகின்றன. குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளாக மாறுவது மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் அரசு தலைகுனிய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி:


அதேபோல் எடப்பாடி பழனிசாமி, “பெண்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையிடமிருந்து பாதுகாப்பு கேட்க வேண்டிய நிலைக்கு பெண்களை தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசு தலைகுனிய வேண்டும்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் – அண்ணாமலை:

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மேலும், “போலீசாரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைக்கு தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சகோதரிகளை விட குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடனே செயல்பட்டு வரும் கையாலாகாத தி.மு.க. அரசால் தமிழக பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குற்றம் செய்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை என்பதற்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் – சீமான்:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், “குற்றத்தை தடுத்து மக்களை காக்க வேண்டிய காவலர்கள் அப்பாவி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.