பாமகவில் அடுத்த அதிரடி.. ஜி.கே மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி அறிக்கை..
Anbumani Ramadoss: அன்புமணி தரப்பில் பாமகவிலிருந்து ஜி.கே. மணியை நீக்கி அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலை பாமக இரண்டாகப் பிரிந்து சந்திக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இருவரும் தனித்தனியாக தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, டிசம்பர் 26, 2025: பாமகவில் உட்கட்சி விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே கடந்த பல மாதங்களாக அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது, ராமதாஸின் ஆதரவாளராகக் கருதப்படும் ஜி.கே. மணியை அன்புமணி அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால், பாமகவில் இன்னும் உட்கட்சி விவகாரம் தீராத நிலையில் உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் சூழலில், தொண்டர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
அதிகார போட்டியில் ராமதாஸும் அன்புமணியும்:
இந்த நிலையில், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலை பாமக இரண்டாகப் பிரிந்து சந்திக்கும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இருவரும் தனித்தனியாக தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள், பொதுக்குழுக் கூட்டங்கள், நடைபயணம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க, டிசம்பர் 26, 2025 தேதியான இன்று காலை ராமதாஸ் தரப்பில் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது, அன்புமணி தரப்புடன் எந்தவித கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் நடத்தக் கூடாது என்றும், அவ்வாறு நடத்தினால் அது சட்டரீதியாக குற்றமாகும் என்றும், அரசியல் கட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: எந்த பேச்சுவார்த்தையும் கூடாது.. அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பில் எச்சரிக்கை..
ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்கிய அன்புமணி:
இதன் தொடர்ச்சியாக, தற்போது அன்புமணி தரப்பில் பாமகவிலிருந்து ஜி.கே. மணியை நீக்கி அதிரடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பெண்ணாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சி தலைமையின் முடிவுகளுக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், கட்சியின் அமைப்பு விதி 30-ன் படி, அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை ஏன் நீக்கக் கூடாது என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு, கடந்த டிசம்பர் 18ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே. மணி அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் பெறப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது.
மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவை ஜன.20-இல் கூடுகிறது…சபாநாயகர் மு.அப்பாவு அறிவிப்பு!
கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே. மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-ன் படி அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கலாம் என ஒழுங்கு நடவடிக்கைக் குழு கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்று, ஜி.கே. மணி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே. மணி அவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.